புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட செயலிகளில் பணம் வைத்து விளையாடும் நபர்கள் குறுகிய காலத்திலேயே அந்த விளையாட்டிற்கு அடிமையாகி, பணத்தை இழப்பதோடு தற்கொலையும் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற பணம் சம்பாதிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளில் பலரும் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். பல குடும்பங்கள் கடனில் தள்ளப்படுகின்றன.
மேலும், இந்த செயலிகள் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனை, நிதி முறைகேடுகள் நடப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 1,500க்கும் மேற்பட்ட அனுமதி பெறாத ஆன்லைன் கேமிங் செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்த போதிலும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. இதனால், பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை ஒழுங்குபடுத்தும் வகையில் ஆன்லைன் கேமிங் ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மசோதாவை கொண்டு வர ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த மசோதாவில் பணம் வைத்து ஆன்லைன் கேம் விளையாடும் தளங்களுக்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள் பண பரிமாற்றம் செய்வதை முற்றிலும் தடை செய்கிறது. மேலும் இதுபோன்ற விளையாட்டுகளை விளம்பரப்படுத்தவும் முழுமையான தடை விதிக்கப்படும். அனுமதியின்றி செயல்படும் ஆன்லைன் கேமிங் தளங்களை தடை செய்வதோடு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படும்.
இதன் மூலம் ஆன்லைன் கேமிங் மூலம் சூதாட்டம் முற்றிலும் தடுக்கப்படும். இதுதவிர, ராஜஸ்தானின் கோட்டா-பண்டியில் ரூ.1,507 கோடியில் புதிய பசுமை விமான நிலையத்தை அமைக்கவும், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 110 கிமீ தூரத்திற்கு முக்கிய துறைமுகங்கள், நகரங்களை இணைக்கும் வகையில், ரூ.8,307.74 கோடியில் 6 வழி பைபாஸ் சாலை திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.