பணம், கருத்துரிமையை பறித்தார்கள் இப்போது ஓட்டுரிமையை பறிக்க பா.ஜ. முயற்சி செய்து வருகிறது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, எம்பி விஜய் வசந்த், முன்னாள் எம்பிக்கள் ஜே.எம்.ஆரூண், ராம சுப்பு, துணை தலைவர் சொர்ணா சேதுராமன், அமைப்புச் செயலாளர் ராம் மோகன், அணி தலைவர்கள் சூரிய பிரகாஷ்,
அசினா சையத், மாநில பொதுச் செயலாளர் டி.செல்வம், தளபதி பாஸ்கர், பி.வி.தமிழ்செல்வன், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், சுமதி அன்பரசு, ஆர்.டி.ஐ.பிரிவு மாநில துணை தலைவர் மயிலை தரணி, எஸ்.சி.துறை துணை தலைவர் மா.வே.மலையராஜா உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். தொடர்ந்து, செல்வப் பெருந்தகை அளித்த பேட்டி:
எழுத்தறிவு, பேச்சுரிமை உள்ளிட்ட உரிமைகள் எல்லாம் கடந்த 11 ஆண்டுகளாக பறிக்கப்பட்டு வருகிறது. பணத்தை பறித்தார்கள், கருத்துரிமையை பறித்தார்கள். இப்பொழுது ஓட்டுரிமையை பறிக்க முயற்சி செய்து வருகிறார்கள். அதைத்தான் ராகுல் காந்தி மக்கள் குரலாக ஆதாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். தூய்மைப்பணியாளர்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் 7 பொன்னான திட்டங்களை அறிவித்துள்ளார்கள். அதை வரவேற்கிறோம். ஊதிய உயர்வை உறுதி செய்ய வேண்டும். நாளைக்கே கூட பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
ஒன்றிய பாஜ அரசு எல்லாவற்றையும் கொள்ளையடித்து விட்டது. கொள்ளையடிக்க ஒன்றும் இல்லை. உயிருக்கு போராடி ஐசியூ சென்றால், அங்கும் ஜிஎஸ்டி கட்ட வேண்டும். இனி மக்களிடம் சக்தி இல்லை. கடைசியாக இருந்த வாக்குரிமையையும் திருடி விட்டார்கள். தீவிரவாதம் தீவிரவாதம் தான். அது எந்த முகத்தில் வந்தாலும் எதிர்க்கும் ஒரே பேரியக்கம் காங்கிரஸ். தீவிரவாதத்தால் எங்கள் தலைவர்களை இழந்துள்ளோம். காந்தியை கொன்றது எந்த தீவிரவாதி என்று சொல்ல சொல்லுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.