சீர்காழி: மயிலாடுதுறை மாவட்ட தவெக மகளிர் அணி அமைப்பாளர் மற்றும் 10 இளம் அமைப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் தலைமை ஒரு அறிவிப்பை வௌியிட்டுள்ளது. ஆனால் தலைமை அறிவித்த மகளிர் அணி இணை அமைப்பாளர்கள் பட்டியலில் இருந்து 7 பேரை நீக்கி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தனக்கு ஆதரவான 7 பேர்களை சேர்த்து தன்னிச்சையாக பட்டியலை வெளியிட்டதாகவும், தான் அறிவித்த பட்டியலில் உள்ளவர்களின் புகைப்படங்களுடன் மகளிர் அணி அமைப்பாளர் நகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் அமைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளர்கள் சசிகலா, ஜான்சி ராணி ஆகியோர் கூறும்போது, கடந்த 20 வருடமாக விஜய் ரசிகையாக இருந்து வருகிறோம். கடந்த 3ம் தேதி மாவட்ட மகளிர் அணி பதவிகள் அறிவிக்கப்பட்டன. தலைமை அறிவித்த பட்டியலில் இருந்து 7 பேரை நீக்கி புதிதாக 7 பேரை போலியாக நியமித்து ஆள் மாறாட்டம் செய்கின்றனர். மாவட்ட செயலாளரிடம் கேட்டபோது பணம் கொடுத்தால் தான் இந்த பொறுப்பில் இருக்க முடியும். பணம் கொடுக்க முடியவில்லை என்றால் பொறுப்பை விட்டு போய் விடுங்கள் என்று கூறுகிறார். பணம் கொடுத்து தான் இந்த கட்சியில் செயல்படணுமா? விஜய்க்காக உழைக்கணும் என்று தான் இந்த கட்சிக்கு வந்தோம். விஜய் மூலம் நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறோம். எனவே மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட மகளிர் அணி செயலாளர் மீது தலைமை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.

