பணம் கொடுத்து பீகாரில் வெற்றி மே.வங்கத்தில் பாஜவின் சூழ்ச்சி பலிக்காது: பிரதமர் மோடிக்கு திரிணாமுல் எம்பி பதில்
புதுடெல்லி: மேற்குவங்கத்தில் பாஜவின் பிரித்தாளும் சூழ்ச்சி பலிக்காது என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பீகார் வெற்றி விழாவில் பேசிய பிரதமர் மோடி, அடுத்த இலக்கு மேற்குவங்கத்தில் காட்டாட்சியை அகற்றுவது தான் என்றார். இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சகாரிகா கோஷ், “பிரதமர் மோடி மேற்குவங்கத்தை கைப்பற்ற விரும்புகிறார். அதைப்பற்றி பேசுகிறார்.
பாஜ முதலில், பணம் கொடுக்கும், பிரித்தாளும் தந்திரத்தால் வன்முறையை ஏற்படுத்தும், படை பலத்தை பயன்படுத்தும். பாஜவின், மோடியின் இந்த அரசியலை மேற்குவங்க மக்கள் ஏற்க மாட்டார்கள். இரண்டாவதாக, முதல்வர் மம்தா பானர்ஜி எப்போதும் விமானத்தில் பயணிக்காமல், 24 மணி நேரமும் மக்களுடனே இருக்கிறார். வாக்கு கேட்க வருகிறார். பாஜ மற்றும் ஒன்றிய அரசுக்கு மேற்குவங்க மக்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.


