பணப்பரிமாற்றத்தை டிஜிட்டல் மயமாக்கிய ஒன்றிய அரசு பெரிய சாதனை படைத்துவிட்டதாக மார்த்தட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் யுபிஐ பணப்பரிமாற்றத்தால் ஏழை, எளிய, நடுத்தர, சிறிய வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எளியவர்களை தான் சட்டம் வலைவீசி பிடிக்கும் என்ற பழமொழிக்கேற்ப காய்கறி வியாபாரம் செய்து அன்றாடம் சொற்ப லாபம் பார்க்கும் சிறு வணிகர்களுக்கு ஜிஎஸ்டி செலுத்த சொல்லி வணிகவரித்துறை நோட்டீஸ் அனுப்புவது தான் கொடுமை.
பெங்களூருவில் தெருவோரக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகள், டீக்கடைகள் என அனைத்து கடைகளும் கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறிவிட்ட நிலையில், ஓராண்டில் யுபிஐ மூலம் குறிப்பிட்ட தொகைக்கு மேல் வருவாய் ஈட்டிய வணிகர்களுக்கு கர்நாடக வணிக வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வருவாய் ஈட்டிய 14,000 வணிகர்களுக்கு வணிக வரித்துைற ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பியது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவணிகர்கள் பெரும்பாலோனோர் பெங்களூருவில் யுபிஐ பரிவர்த்தனையிலிருந்து முழுக்க முழுக்க பணப் பரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர். தங்கள் கடைகளில் ஒட்டப்பட்டிருந்த கியூஆர் கோடை அகற்றிவிட்டு, பணம் மட்டுமே பெறப்படும் என்று எழுதி வைத்துவிட்டனர்.
இந்நிலையில், தாவணகெரெயில் காய்கறிக்கடைக்காரர் ஒருவருக்கு ரூ.29 லட்சம் ஜிஎஸ்டி செலுத்த சொல்லி வணிக வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் யுபிஐ மூலம் ரூ.1.63 கோடி அவரது கணக்கில் செலுத்தப்பட்டிருந்தது. சாலையோரம் காய்கறிக்கடை வைத்திருக்கும் அந்த நபரின் வாழ்க்கைமுறைக்கும், அவருக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்ட தொகைக்கும் இடையேயான வித்தியாசம் தான் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வியாபாரத்தில் நல்ல வருமானம் ஈட்டும் பல வணிகர்கள், ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வருவாய் கொண்ட ஜிஎஸ்டி வரம்பைத் தவிர்ப்பதற்காக, தங்கள் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக்கணக்குகளுடன் இணைக்கப்பட்ட மூன்று, நான்கு என்று வெவ்வேறு கியூஆர் கோட்-களை பயன்படுத்தி ஜிஎஸ்டியிலிருந்து தப்பித்துவிட்டனர். அப்படி சூட்சமமாக செயல்படாதவர்களே மாட்டிக்கொள்கின்றனர்.
சிறுவணிகர்கள் தங்களுக்கு நேர்ந்த ெகாடுமைைய கண்டித்து பெங்களூருவில் பால், தயிர், டீ ஆகிய விற்பனைையை நிறுத்தி போராட்டம் நடத்தினர். மாநில அளவில் முழு கடையடைப்பு நடத்த திட்டமிட்டனர். இதற்கிடையில் ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பியது, மாநில வணிகவரித்துறை. முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று பாஜ தலைவர்கள் வலியுறுத்தினர். பின்னர் சிறுவணிகர்கள் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் 3 ஆண்டு நிலுவை வரித்தொகையை தள்ளுபடி செய்ய முதல்வர் உத்தரவிட்டதை தொடர்ந்து வணிகர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஜிஎஸ்டி வரி விதிப்பில் வணிகவரித்துறை அதிகாரிகளுக்கே இன்னும் குழப்பம் இருப்பதால், யுபிஐ பயன்படுத்தி சிறு வணிகர்கள் அவசியமின்றி பாதிப்படைகின்றனர். பால், தயிர், காய்கறிகள் ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளித்துள்ள நிலையில் வணிக வரித்துைற அதிகாரிகள் எந்த சட்டத்தை பயன்படுத்தி வணிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர் என்பது தான் புரியாத புதிராய் இருக்கிறது.
 
  
  
  
   
