Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பண மோசடி எதிரொலி; ஓட்டலை மூடும் ஷில்பா ஷெட்டி

மும்பை: தமிழில் பிரபு தேவாவுடன் ‘மிஸ்டர் ரோமியோ’ என்ற படத்திலும் ‘குஷி’ படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியவர் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. இந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்த இவர் 30 ஆண்டுகளை கடந்து சினிமாவில் கோலோச்சி வருகிறார். தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். நடிகரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா என்பவரை கடந்த 2009ம் ஆண்டு ஷில்பா ஷெட்டி திருமணம் செய்துகொண்டார்.

ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா தம்பதிக்கு சொந்தமான பெஸ்ட் டீல் டிவி நிறுவனத்தின் இயக்குனராக ஷில்பா ஷெட்டி செயல்பட்டு வந்துள்ளார். இந்த நிறுவனத்தின் 87 சதவீத பங்குகள் ஷில்பா ஷெட்டியிடம் இருந்துள்ளது. 2015ம் ஆண்டு ஷில்பா ஷெட்டி ராஜ் குந்த்ரா தம்பதி ராஜேஷ் ஆர்யா என்ற ஏஜென்ட் மூலம் தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவரை தொடர்பு கொண்டு, தங்களது நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக 75 கோடி ரூபாய் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அந்த பணத்தை கடனாக பெற்றால் வரி பிரச்னை வரும் என்று தீபக் கோத்தாரி கூறியுள்ளார். அதனால் அந்த தொகையை நிறுவனத்தில் முதலீடாக மாற்றுவதற்கு கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், உரிய நேரத்தில் அந்த பணம் திருப்பித் தரப்படும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி 2015 - 2016ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா தம்பதிக்கு தீபக் கோத்தாரி 60 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து வாங்கிய பணத்தை உரிய நேரத்தில் தராமல் ஷில்பா ஷெட்டி ராஜ் குந்த்ரா தம்பதி இழுத்தடித்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து தீபக் கோத்தாரி பலமுறை கேட்டும், அவர்கள் தட்டிக் கழித்ததால் அவர்கள் மீது பண மோசடி வழக்குப் பதியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மும்பையில் செயல்பட்டு வரும் தனது ‘பாஸ்டியன் பந்திரா’ என்ற ஓட்டலை மூடுவதாக ஷில்பா ஷெட்டி அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஷில்பா ஷெட்டி, ‘‘இந்த வியாழன் மும்பையின் ஒரு முக்கிய இடமாக விளங்கிய பாஸ்டியன் பாந்த்ரா என்ற சகாப்தம் முடிவுக்கு வருகிறது. நாங்கள் பிரியாவிடை கொடுக்கிறோம். எண்ணற்ற நினைவுகள், நகரத்தின் இரவு வாழ்க்கையை வடிவமைத்த தருணங்களை வழங்கிய இந்த இடம் தற்போது தனது இறுதி வணக்கத்தை செலுத்துகிறது. இந்தப் புகழ்பெற்ற இடத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், எங்கள் நெருங்கிய வட்டாரங்களுக்கு ஒரு சிறப்பு விருந்தை ஏற்பாடு செய்துள்ளோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.