*ரூ.4 ஆதரவு விலையாக மாநில அரசு வழங்கியது
சித்தூர் : சித்தூர், திருப்பதி மாவட்டத்தை சேர்ந்த மாங்காய் விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.173 கோடியைமாநில அரசு டெபாசிட் செய்துள்ளது.
சித்தூர் மாவட்ட மாங்காய் விவசாயிகளுக்கு 147 கோடி ரூபாய் அவரவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது மாவட்ட கலெக்டர் சுமித் குமார் தெரிவித்தார் சித்தூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கலெக்டர் சுமித் குமார் தலைமை தாங்கி பேசியதாவது: சித்தூர் மாவட்டத்தில் அதிக அளவு விவசாயிகள் மாங்காய் சாகுபடி செய்து வருகிறார்கள். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மாங்காய் விளைச்சல் அதிகரித்தது.
இதனால் மாங்காய் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் மாநில அரசுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும், மாங்காய் விலை நிர்ணயம் அரசே செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மாங்காய் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனி குழு அமைத்து மாங்காய் விலைகளை நிர்ணயம் செய்தார். அதன்படி தோத்தாபுரி மாங்காய் கிலோ ரூ.8க்கு தொழிற்சாலை உரிமையாளர்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். மேலும், ரூ.4 மாநில அரசு விவசாயிகளுக்கு ஆதரவு விலை வழங்கும் என தெரிவித்தார்.
அதன்படி சித்தூர் மாவட்டத்தில் 34 மண்டலங்களில் உள்ள 32 ஆயிரம் விவசாயிகளுக்கு மாங்காய் ஆதரவு விலையாக ரூ.147 கோடி வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்ததோடு மட்டுமல்லாமல் அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டது என கூறி நன்றி தெரிவித்து வருகின்றனர்மாநில அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறது.
அதில் ஒன்று மாங்காய் விவசாயிகளுக்கு ஆதரவு விலை. அதேபோல் விவசாயிகளும் மாங்காய் விவசாயம் ஒன்றே செய்யாமல் கூடுதலாக கரும்பு, நெல், காய்கறிகள், சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து பயனடைய வேண்டும்.
மாங்காய் மட்டுமே சாகுபடி செய்தால் அதிக விளைச்சல் காரணமாக விலை குறைவு ஏற்படுகிறது. இதனை ஒவ்வொரு விவசாயிகளும் கருத்தில் கொண்டு மாற்று விவசாயத்தை செய்து பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாம்பழ தொழிற்சாலை சங்க தலைவர் பாபி மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பதி: திருப்பதி கலெக்டர் வெங்கடேஸ்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பதி மாவட்டத்தைச் சேர்ந்த 5,952 விவசாயிகளிடமிருந்து கூழ் தொழிற்சாலைகள் மற்றும் ரேம்ப்கள் மூலம் 65014 டன் மாம்பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
அதில் என்பிசிஐ இணைப்புகளைக் கொண்ட விவசாயிகளின் கணக்குகளில் ரூ.26 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மாம்பழ விவசாயிகளின் கஷ்டங்களை உணர்ந்து, சரியான நேரத்தில் பதிலளித்து, குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.4 அவர்களின் கணக்குகளில் டெபாசிட் செய்ததற்காக விவசாயிகள் மாநில அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.