மும்பை: பாகிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்த முகமது ரிஸ்வான் அதிரடியாக நீக்கப்பட்டு புதிய கேப்டனாக வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி நியமிக்கப்பட்டிருக்கிறார். தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது. முகமது ரிஸ்வான் ஏன் நீக்கப்பட்டார் என்பதற்கான காரணத்தை இதுவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிடவில்லை.
இன்னும் சொல்லப்போனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரிஸ்வான் தொடர்பான எந்த ஒரு வார்த்தையும் இடம் பெறவில்லை. இஸ்லாமாபாத்தில் தேர்வு குழுவினர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் ஆகியோர் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் நடைபெற உள்ள நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. பயிற்சியாளர் மைக் ஹெசன் தான் ஒரு நாள் அணிக்கு புதிய கேப்டன் வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்வியை சந்தித்து பேசியதாகவும், அதன்படியே புதிய கேப்டன் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
முதலில் பயிற்சியாளரின் இந்த கோரிக்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் அதன் பின்பு தான் இந்த முடிவு மாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டி20 அணியின் கேப்டனாக ஷாகின் அப்ரிடி 2024ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒருமுறை செயல்பட்டு இருக்கிறார். அதில் நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4க்கு ஒன்று என்ற கணக்கில் படுதோல்வியை தழுவியது.
இதனையடுத்து கேப்டன் பதவியில் இருந்து ரிஸ்வான் நீக்கப்பட்டார். முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று அசத்தியது. எனினும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. இதுதான் அவருடைய நீக்கத்திற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.