தற்காலிக பிரதமரைப் போல் நடக்கிறார் அமித்ஷாவிடம் மோடி உஷாராக இருக்க வேண்டும்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின் நேற்று கொல்கத்தா விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்துவதற்கு பாஜ தலைமை தேர்தல் ஆணையத்தை பயன்படுத்திக் கொள்கிறது. பாஜ உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டுமா, அல்லது மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் பொது நலனுக்காக செயல்பட வேண்டுமா? இதெல்லாம் அமித் ஷா விளையாடும் விளையாட்டு. அவர் இந்த நாட்டின் தற்காலிக பிரதமர் போல் நடந்து கொள்கிறார்.
இதை சொல்வதற்கு நான் வருந்துகிறேன். அமித் ஷாவை எப்போதும் நம்ப வேண்டாம் என்று பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொள்கிறேன். ஒருநாள், அவர் உங்கள் மிகப்பெரிய மிர் ஜாபராக (பிளாசி போரில் நவாப் சிராஜ் உத் தவுலாவை காட்டிக் கொடுத்து பின்னர் ஆங்கிலேயர்களின் உதவியுடன் மன்னரான 18ம் நூற்றாண்டின் வங்காள ராணுவ ஜெனரல்) மாறலாம். விழிப்புடன் இருங்கள். இந்த நாட்டை பாஜ அழிக்கிறது. இதுபோன்ற திமிர்பிடித்த மற்றும் சர்வாதிகார ஆட்சியை நான் ஒருபோதும் கண்டதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.