புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா இடையே 50 சதவீத வரியால் உறவு பாதிக்கப்பட்ட நிலையில் டெல்லி வந்துள்ள அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். 6 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்துள்ள அவர் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முக்கியமான கனிமங்கள் துறைகளில் ஒத்துழைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பிரதமர் மோடியைச் சந்திப்பதற்கு முன்பு, வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருடன் அமெரிக்க தூதர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரதமர் மோடியுடன் நடந்த சந்திப்பு குறித்து செர்ஜியோ கோர் கூறுகையில்,’ \”பிரதமர் மோடியுடனான ஒரு நம்பமுடியாத சந்திப்பை இப்போதுதான் முடித்தோம். அவருடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட இருதரப்பு பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். முக்கியமான கனிமங்களின் முக்கியத்துவம் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். இந்தியாவுடனான தனது உறவை அமெரிக்கா மதிக்கிறது. அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியின் வலுவான தலைமையின் கீழ், எங்கள் இரு நாடுகளுக்கும் வரவிருக்கும் நாட்கள் குறித்து நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
டிரம்ப் மோடியை ஒரு சிறந்த மற்றும் தனிப்பட்ட நண்பராகக் கருதுகிறார். டிரம்பின் தூதராக பணியாற்றுவது ஒரு மரியாதை, மேலும் இந்த மிக முக்கியமான உறவை நான் எதிர்நோக்குகிறேன். மேலும் அது தொடர்ந்து வளர்ந்து ஆழமடையும்’ என்றார். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்,’ இந்தியாவுக்கான அமெரிக்காவின் தூதராக நியமிக்கப்பட்ட செர்ஜியோ கோரை வரவேற்பதில் மகிழ்ச்சி. அவரது பதவிக்காலம் இந்தியா-அமெரிக்க விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்’ என்றுகுறிப்பிட்டுள்ளார்.