2029, 2034ம் ஆண்டுகள் மட்டுமல்ல 2047 வரை மோடியே பிரதமர் வேட்பாளர்: ராஜ்நாத் சிங்கின் கருத்துக்கு நெட்டிசன்கள் கிண்டல்
புதுடெல்லி: வரும் தேர்தல்களிலும் மோடியே பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் என ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தடாலடியாக கூறியுள்ளார். தேசிய கட்சியான பாஜகவில் 75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்களுக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்படாது என்ற விதிமுறை முன்பு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அக்கட்சியின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி உள்ளிட்ட பலரும் ஒதுக்கப்பட்டனர். இந்த சூழலில், சமீபத்தில் பிரதமர் மோடி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்காக 75 வயது விதிமுறை தளர்த்தப்படுமா என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசிய ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘எதிர்காலத்தில் பிரதமர் பதவிக்கு காலியிடம் இல்லை. 2029, 2034 மற்றும் அதன்பிறகும் கூட எங்கள் பிரதமர் வேட்பாளர் மோடிதான்; உலகத் தலைவர்கள்கூட உலக விஷயங்களில் அவரிடம் ஆலோசனை பெறுகிறார்கள். பிறந்தநாளுக்காக உலகத் தலைவர்களிடமிருந்து இவ்வளவு தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகளைப் பெறும் பிரதமரை நான் பார்த்ததில்லை.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, முப்படைத் தளபதிகள் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகருடன் கலந்தாலோசித்து, ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்து ஒன்றியய அரசு எடுத்த பதிலடி நடவடிக்கையே மோடியின் செயல்பாட்டுக்கு சிறந்த உதாரணம். வரும் 2047ம் ஆண்டில் ‘வளர்ந்த பாரதம்’ என்ற இலக்கு நிறைவேறிய பிறகு அவர் அரசியலில் இருந்து விலகுவார். கடந்த 2013ம் ஆண்டு தேர்தலின்போது, எல்.கே.அத்வானி மீது தங்களுக்கு மிகுந்த மரியாதை இருந்தபோதிலும், ஒட்டுமொத்த நாடும் மோடியின் தலைமையை விரும்பியதால், அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினோம்’ என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
பிரதமர் மோடிக்கு இன்றைய நிலையில் 75 வயதாகிறது. வரும் 2047ம் ஆண்டு வரை அவரே பிரதமர் வேட்பாளர் என்றால், அப்போது மோடிக்கு 97 வயதாகி இருக்கும். எனவே 97 வயதாக மோடி இருக்கும் போது, அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பீர்களா? அதுவரை பாஜகவில் யாரையும் முன்னிலை படுத்த மாட்டீர்களா? என்று சமூக வலைதளங்களில் கேலியும், கிண்டலுமாக விமர்சித்து வருகின்றனர்.