இனக்கலவரம் வெடித்து 29 மாதங்களுக்கு பிறகு மோடியின் 3 மணிநேர பயணம் மணிப்பூர் மக்களுக்கு அவமானம்: காங்கிரஸ் சாடல்
புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023 மே 3ம் தேதி மெய்டீஸ், குக்கி, நாகா மக்களிடையே இனமோதல் வெடித்தது. இதில், 260க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அங்கு தற்போது நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. மேலும், என்.பிரேன் சிங் தலைமையிலான அரசு ராஜினாமா செய்ததால், குடியரசு தலைவர் ஆட்சிஅமல்படுத்தப்பட்டது. இந்த வன்முறைக்கு பிறகு பிரதமர் மோடி ஒரு முறை கூட மணிப்பூர் செல்லாமல் இருப்பது குறித்து காங்கிரஸ் பலமுறை கேள்வி எழுப்பி, விமர்சித்துள்ளது. தற்போது மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்து இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மோடி வரும் 13ம் தேதி மணிப்பூர் செல்ல உள்ளதாக தகவல்கள் வௌியாகி உள்ளன.
மிசோரம் மாநிலத்தில் ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, அதனை தொடர்ந்து மணிப்பூர் செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகை தொடர்பாக மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா நேற்று தலைமை செயலாளர் புனித் குமார் கோயல், பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் மற்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ராஜீவ் சிங், உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்வர் என்.பிரேன் சிங் உள்பட பாஜ தலைவர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “செப்டம்பர் 13ம் தேதி பிரதமரின் உத்தேச மணிப்பூர் பயணம் பற்றி அவரது ஆதரவாளர்கள் பாராட்டுகின்றனர். ஆனால் இந்த பயணத்தின்போது வெறும் 3 மணி நேரம் மட்டுமே அங்கு செலவிடுவார் என தெரிகிறது. இந்த அவசர பயணத்தால் மோடி என்ன சாதிக்க விரும்புகிறார்? இது பிரதமர் மோடியின் வருகைக்காக 29 மாதங்களாக காத்திருக்கும் மக்களுக்கு பெரும் அவமானம். இது மணிப்பூர் மக்கள் மீது மோடிக்கு இருக்கும் அக்கறையின்மையை மீண்டும் வௌிப்படுத்துகிறது” என்றார்.