டொனால்டு டிரம்புடன் பேசமாட்டேன்; மோடி, ஜின்பிங்குடன் பேச போகிறேன்: அமெரிக்கா மீது பிரேசில் அதிபர் காட்டம்
பிரேசிலியா: அமெரிக்கா விதித்துள்ள கடுமையான வர்த்தக வரிகளுக்கு மத்தியில், அந்நாட்டு அதிபர் டிரம்பிடம் பேசமாட்டேன். இந்திய பிரதமர், சீனப் பிரதமரிடம் பேசப்போகிறேன் என பிரேசில் அதிபர் லூலா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் பிரேசிலுக்கும் இடையேயான வர்த்தக உறவில் கடுமையான விரிசல் ஏற்பட்டுள்ளது. பிரேசில் இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதலாக 40% வரியை விதித்ததால், மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு அமெரிக்கா விடுத்த எச்சரிக்கையின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வரி விதிப்பை, இருதரப்பு உறவுகளின் மிகவும் வருந்தத்தக்க நாள் என பிரேசில் அதிபர் லூலா குறிப்பிட்டார். வர்த்தகப் பேச்சுவார்த்தைக்காக அதிபர் லூலா தன்னை எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் என டிரம்ப் முன்னதாகக் கூறியிருந்தார். இந்நிலையில், தங்கள் நாட்டின் வர்த்தக நலன்களைப் பாதுகாக்க, உலக வர்த்தக அமைப்பு உள்ளிட்ட அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் என பிரேசில் அறிவித்திருந்தது. இந்தச் சூழலில், பிரேசில் அதிபர் லூலா அளித்த பேட்டியில், ‘அமெரிக்க அதிபர் டிரம்ப் என்னிடம் பேச விரும்பாததால், அவரை நான் தொடர்பு கொள்ளப் போவதில்லை.
மாறாக, இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உலகத் தலைவர்களைத் தொடர்பு கொள்ளப் போகிறேன்’ என்றார். முன்னதாக வர்த்தகப் பிரச்னை மட்டுமின்றி, பிரேசிலின் உள்நாட்டு விவகாரங்களிலும் அமெரிக்கா தலையிடுவது இரு நாடுகளுக்கு இடையே மோதலை அதிகரித்துள்ளது. ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனாரோவை வீட்டுக் காவலில் வைக்க பிரேசில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அமெரிக்கா கண்டித்துள்ளது. மேலும், இந்த உத்தரவைப் பிறப்பித்த நீதிபதியை ‘மனித உரிமை மீறிய நபர்’ எனக் குறிப்பிட்டு, அவர் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாஸ்கோவில் இன்று பேச்சுவார்த்தை
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விமர்சனங்கள் நியாயமற்றவை மற்றும் தேவையற்றவை. அணுசக்தித் துறைக்குத் தேவையான யுரேனியம், மின்சார வாகனங்களுக்கான பல்லேடியம், உரங்கள் மற்றும் ரசாயனப் பொருட்களை அமெரிக்க நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து வாங்கிக் கொண்டிருக்கும் போது, இந்தியாவை மட்டும் குறிவைப்பது இரட்டை நிலைப்பாடு. பொருளாதாரத் தேவைகளின் அடிப்படையிலேயே இந்தியா எரிசக்தி வாங்குகிறது’ என்று அதில் கூறப்பட்டது.
இந்தியாவின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து டிரம்பிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘ரஷ்யாவிடம் இருந்து யுரேனியம் வாங்குவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அதை நான் சரிபார்க்க வேண்டும். இந்தியா நல்ல வர்த்தக கூட்டாளியாக இல்லை. அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவர்கள் மீதான வரிகளை கணிசமாக உயர்த்தப் போகிறேன். ஏனெனில், அவர்கள் ரஷ்ய எண்ணெய்யை வாங்கி, போர் இயந்திரத்திற்கு எரிபொருளாக்கின்றனர். ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 100% வரி விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும். உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவதே எனது நோக்கம். மாஸ்கோவில் புதன்கிழமை (இன்று) நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைக்குப் பிறகே ரஷ்யா மற்றும் அதன் வர்த்தக கூட்டாளிகள் மீதான வரி விதிப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்று டிரம்ப் தெரிவித்தார்.