சென்னை: மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: மோடி தலைமையிலான பாஜ ஒன்றிய அரசு கடந்த பத்தாண்டுகளாக தமிழ்நாட்டையும், மக்களையும் வஞ்சித்து வருகிறது. தமிழ்நாடு இயற்கை பேரிடர் தாக்குதலால் பேரிழப்பை சந்தித்து, மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்த நேரத்தில் பாஜ அரசு அவதூறு பரப்பி அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் ஈடுபட்டதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள்.
மிக்ஜாம் புயலும், பெருமழையும் தாக்குதல் நடத்தியது. இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, பாதுகாத்து, மறுவாழ்வுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு ரூ2,477 கோடி செலவு செய்துவிட்ட நிலையிலும் மோடியின் பாஜ ஒன்றிய அரசு இரக்கம் காட்ட முன்வரவில்லை. ரூ.37 ஆயிரத்து 907 கோடி பேரிடர் கால சேதாரங்களை சீர்படுத்த தேவை என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு அலட்சியம் செய்த நிலையில் தமிழ்நாடு அரசு உதவி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.
இப்போது மிக குறைவான தொகையை ஒதுக்கியிருப்பது தமிழக மக்களை அவமதிக்கும் செயல். இச்செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், உடனடியாக தமிழ்நாடு அரசு கோரியுள்ள ரூ.37 ஆயிரத்து 907 கோடியை ஒதுக்கீடு செய்து உத்தரவு வழங்குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.