Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மோடியின் கோயபல்ஸ் பிரசாரத்தால் இந்தியா கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது: செல்வப்பெருந்தகை கடும் தாக்கு

சென்னை: மோடியின் கோயபல்ஸ் பிரசாரத்தால் இந்தியா கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது என்று செல்வப்பெருந்தகை கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத் தேர்தலுக்கான நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டிருக்கிற நிலையில் நிதானமிழந்து ஆத்திரம் பொங்க கடுமையான வார்த்தைகளால் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று பேசி வந்தவர், தொடக்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து இட்டுகட்டி அவதூறு பிரசாரம் மேற்கொண்டார். ‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி கோயிலை புல்டோசரால் இடித்து விடுவார்கள்” என்று அபாண்டமாக காழ்ப்புணர்ச்சியின் உச்சத்தில் வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறார்.

இத்தகைய பேச்சுகளை பேசுகிற ஒருவர், 10 ஆண்டு காலம் பிரதமராக பதவி வகித்தது இந்தியாவிற்கே அவமானமாகும். இத்தகைய பேச்சுகளை மதநல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள எவருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். விரக்தியின் உச்சத்தில் உள்ள மோடி, 3வது முறை ஆட்சிக்கு வர முடியாது என்பதை தமது உளவுத்துறையின் மூலம் முற்றிலும் அறிந்து விட்ட நிலையில் நாட்டு மக்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிற வகையில் பாசிச, வெறித்தனமான கருத்துகளை கூறி வருகிறார். இந்த கருத்துகளை நாட்டு மக்கள் நிராகரித்த நிலையில் உரிய பாடத்தை வருகிற 5, 6, 7 கட்ட தேர்தல்களில் புகட்டுவதற்கு மக்கள் தயாராகி விட்டார்கள். எனவே தான் ராகுல்காந்தி பாஜ மீண்டும் நிச்சயம் ஆட்சிக்கு வர முடியாது என்று உறுதிபட கூறி வருகிறார். மக்களின் நாடித்துடிப்பை அறிந்த ராகுல்காந்தியின் கடும் உழைப்பிற்கு தேர்தல் களத்தில் உரிய வெற்றி கிடைக்கப் போகிறது. மோடியின் கோயபல்ஸ் பிரசாரத்தினால் இந்தியா கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது.