Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மோடியை தனியாக சந்திக்க நேரம் ஒதுக்காததால் எடப்பாடி அதிருப்தி: இரவோடு இரவாக சேலம் சென்றார்

திருச்சி: திருச்சியில் பிரதமர் மோடியை தனியாக சந்திக்க நேரம் ஒதுக்காததால் எடப்பாடி அதிருப்தியில் உள்ளார். பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்றுமுன்தினம் இரவு தூத்துக்குடியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். பிரதமரை கவர்னர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், திருச்சி கலெக்டர் சரவணன், மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, புதிய நீதி கட்சி தலைவர் ஏசி.சண்முகம், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், துரை வைகோ எம்பி உள்பட பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதைபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமரை வரவேற்றார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலம் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலுக்கு வந்து தங்கினார். முன்னதாக வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் சில வார்த்தைகள் பேசியதாக தெரிகிறது. அப்போது எடப்பாடி பழனிசாமி, பிரதமரிடம் ஒரு மனு அளித்தார்.

அதில், விவசாய கடன் வழங்குவதற்கு சிபில் ஸ்கோர் கேட்பதில் இருந்து வங்கிகள் விவசாயிகளுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும், கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும், தமிழ்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் பிரத்யேக ராணுவ வழித்தடம் ஒன்றை சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சியை இணைத்து செயல்படுத்த வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, கோரிக்கை மனுவை பரிசீலித்து ஆவன செய்வதாக எடப்பாடியிடம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேச வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்காக நேற்றுமுன்தினம் சுமார் அரை மணி நேரத்திற்கு முன்னதாக திருச்சி விமான நிலையத்திற்கு எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்களுடன் வந்தார். பிரதமர் மோடி விமானத்தில் இருந்து இறங்கி வரும் வழியில் வரிசையாக நின்று தான் பிரதமர் மோடியை எடப்பாடி சந்தித்தார். இதனால் எடப்பாடி அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது. தொடர்ந்து, இரவோடு இரவாக எடப்பாடி சேலத்துக்கு புறப்பட்டு சென்று விட்டார்.

* கழற்றி விடப்பட்ட முன்னாள் அமைச்சர்கள்

ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து விலகிய பிறகு மதுரை திருமங்கலத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு அதிமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமரை சந்திக்க சென்றபோது, உதயகுமாரை அழைக்காமல் எடப்பாடி, நத்தம் விஸ்வநாதனை அழைத்துசென்றது தென்மாவட்ட அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வளர்மதியையும் கழற்றி விட்டு விட்டு மற்ற 3 பேருடன் சென்று பிரதமரை எடப்பாடி பழனிசாமி வரவேற்றது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.