இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்; மோடி நெருங்கிய நண்பர்... ஆனா வரிவிதிப்போம்: டிரம்பின் முரண்பட்ட பேச்சால் பரபரப்பு
லண்டன்: இந்தியா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில், பிரதமர் மோடி தனது நெருங்கிய நண்பர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனைத் தொடர்ந்து, இந்தியப் பொருட்கள் மீது 50 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்தது. இதில், ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்திற்காக மட்டும் 25 சதவீத தண்டனை வரியும் அடங்கும். மேலும், ஈரானில் உள்ள சபஹார் துறைமுகம் தொடர்பான பொருளாதாரத் தடை விலக்கையும் இந்தியாவுக்காக ரத்து செய்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் சில வாரங்களாகவே பெரும் பதற்றம் நீடித்து வந்தது.
இந்தச் சூழலில், இங்கிலாந்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப், அந்நாட்டுப் பிரதமர் கீர் ஸ்டார்மருடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடனும் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். எங்களுடையது மிக நல்ல நட்பு. பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். இந்தியா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளோம். இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு அணு ஆயுத நாடுகளையும் நாங்கள் எளிதில் கையாண்டோம். அது முழுக்க முழுக்க வர்த்தகத்திற்காகத்தான். எங்களுடன் வர்த்தகம் செய்ய விரும்பினால், நீங்கள் இணக்கமாகச் செல்ல வேண்டும் எனக் கூறினேன். அவர்கள் இருவரும் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தனர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்திற்குத் நானே காரணம்’ என்றார். டிரம்பின் இந்தக் கருத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் ஏற்கனவே பலமுறை மறுத்துள்ளனர். பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளுக்கு டிரம்ப் வாழ்த்து தெரிவித்த மறுநாளே, இந்தக் கருத்தைத் தெரிவித்து அவர் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இவ்வாறு ஒருபுறம் நட்புறவு பாராட்டுவதும், மறுபுறம் வர்த்தக ரீதியாக அழுத்தம் கொடுப்பதுமாக டிரம்ப் பேசி வருவது, சர்வதேச அரசியல் நோக்கர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.