Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவின் ஜிடிபியில் ஐஎம்எப் சந்தேகம் எழுப்பும் நிலையில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மோடியும், நிர்மலா சீதாராமனும் தம்பட்டம் அடிப்பது ஏன்?

புதுடெல்லி: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இந்தாண்டு வளர்ச்சி அடைந்துள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது. இந்த சூழலில் ஜிடிபி புள்ளி விவரங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) சந்தேகம் எழுப்பி இருக்கிறது. நாட்டின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை ஒவ்வொரு ஆண்டையும் நான்காக பிரித்து ஆய்வு செய்யப்படும். அந்த வகையில், ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை முதல் காலாண்டு என்றும், ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை 2வது காலாண்டு என்றும், அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை 3வது காலாண்டு என்றும், ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை 4வது காலாண்டு என்றும் கணக்கிடப்படுகிறது. இதில், கடந்த 6 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலாண்டில், நாட்டில் உற்பத்தி அதிகரித்திருக்கிறது என்று ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது.

இந்த சாதனை, ஒன்றிய அரசின் வளர்ச்சி திட்டங்களால்தான் நடந்திருக்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்திருந்தார். ஆனால், ஜிடிபி புள்ளி விவரங்கள் குறித்து ஐஎம்எப் சந்தேகம் எழுப்பியிருக்கிறது. அதாவது, எந்தெந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது? அது உண்மையானதா? சர்வதேச பொருளாதார வளர்ச்சியுடன் இந்த நாடுகள் ஒத்து போகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய ஐஎம்எப் பொருளாதார வல்லுநர்கள் குழு சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு சென்று நேரடியாக ஆய்வை மேற்கொள்ளும். இந்த ஆய்வை ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்து ஐஎம்எப் அறிக்கை வெளியிடும். அந்த வகையில், சமீபத்தில் இந்தியாவிலும் ஆய்வை மேற்கொண்டது. அதனடிப்படையில், ஜிடிபி குறித்து ஒன்றிய அரசு சொல்லி இருக்கும் தகவல்கள் மீது சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. ஒவ்வொரு நாடுகளும் கொடுக்கும் தகவல்களை, ஐஎம்எப் கவனமாக சரிபார்க்கிறது.

இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை தன்மையுடன் இருக்கிறது என்பதற்காக ஏ தரவரிசை, பி தரவரிசை, சி தரவரிசை, டி தரவரிசை என வரிசைப்படுத்துகிறது. இதில் ஏ தரவரிசை கொடுக்கப்பட்ட, நாடுகள் வழங்கிய தகவல்கள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன. அமெரிக்கா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளுக்கு இந்த தரவரிசை வழங்கப்படலாம். சில ஐரோப்பிய நாடுகள், பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகியவற்றிக்கு பி தரவரிசை வழங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு இந்த தரவரிசை வழங்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் அரசு கொடுத்த தகவல்கள், ஐஎம்எப் மேற்பார்வைக்கு போதுமானதாக கருதப்படுகிறது. சி தரவரிசை என்பது போதுமான அளவுக்கு டேட்டாக்கள் கிடைக்கவில்லை என்பதால் கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் டேட்டாக்களை சேகரிப்பதிலும், அதை பகுப்பாய்வு செய்வதிலும் பிரச்னை இருக்கிறது.

குறிப்பாக இன்னும் சொல்லப்போனால் சில முக்கியமான துறைகள் பற்றிய தகவல்கள் முழுமையாக கிடைக்காமல் இருக்கின்றன. அதேபோல ஜிடிபி கணக்கீட்டிற்கான அடிப்படை ஆண்டு என்பது மிகவும் பழமையானதாக இருக்கிறது என்பதை குறிக்கவே ஐஎம்எப் சி தரவரிசையை பயன்படுத்தியுள்ளது. இதையடுத்து ஒன்றிய அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது. இதற்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘ஐஎம்எப் அறிக்கை வளர்ச்சி புள்ளி விவரங்களை கேள்வி கேட்கவில்லை. சி தரம் வழங்கப்பட்டதற்கான காரணம், இந்த தரவு 2011-12 என்ற காலாவதியான அடிப்படை ஆண்டை அடிப்படையாக கொண்டதுதான்’ என்றார்.

இருப்பினும் மற்ற நாடுகளின் டேட்டாக்கள் சிறப்பாக இருக்கும் நிலையில், இந்தியாவில் மட்டும் டேட்டா சேகரிப்பது, பகுப்பாய்வு செய்வதில் என்ன பிரச்னை என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி இருக்கையில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பிரதமர் மோடியும், நிர்மலா சீதாராமனும் தம்பட்டம் அடிப்பது ஏன்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.