புதுடெல்லி: தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஆண்டு முழுவதும் நடக்கும் நிகழ்வை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நினைவு தினத்தின் தொடக்க விழாவை கலாசார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. நூற்றாண்டுக்கால அடிமைத்தனத்தில் சிதைந்து போயிருந்த பாரதத்தில் புதிய உயிர்ப்பை ஏற்படுத்த பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா வந்தே மாதரம் பாடலை இயற்றினார்.
இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்கு உத்வேகம் அளித்து, தேசியப் பெருமையையும் ஒற்றுமையையும் தொடர்ந்து தூண்டும் இந்த காலத்தால் அழியாத இசையமைப்பின் 150வது ஆண்டு நிறைவை போற்றும் வகையில் இந்த ஆண்டு முழுவதும் நடைபெறும் நினைவு நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அடுத்த ஆண்டு நவம்பர் 7 ம் தேதி வரை நாடு முழுவதும் ஒரு வருடம் நடைபெற உள்ளது. இதையொட்டி டெல்லி இந்திரா காந்தி உள் விளையாட்டு மைதானத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு தபால் தலை, நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. முன்னதாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், " இன்று நவம்பர் 7ம் தேதி, நம் நாட்டு மக்களுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக இருக்கும். நம் நாட்டின் தலைமுறையினரை தேசபக்தி உணர்வால் ஊக்கமளிக்கும் வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவை நாம் கொண்டாடுவோம்,"இவ்வாறு தெரிவித்தார்.

