புதுடெல்லி: தேசிய கீதத்தை எழுதியவரை நாடாளுமன்றத்தில் பிரதமர் தவறாக அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் டெல்லி மற்றும் கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 8ம் தேதி மக்களவையில் ‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு விவாதம் நடைபெற்றது. அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, அந்தப் பாடலை இயற்றிய வங்காளத்தின் புகழ்பெற்ற கவிஞர் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயாவை ‘பங்கிம் தா’ (அண்ணன்) என்று குறிப்பிட்டார்.
இவ்வளவு பெரிய மூத்த படைப்பாளியை இவ்வாறு அழைப்பது முறையல்ல என்றும், ‘பங்கிம் பாபு’ என்று அழைப்பதே மரியாதையானது என்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.சவுகதா ராய் அப்போதே ஆட்சேபனை தெரிவித்தார். உடனே அந்தச் சுட்டிக்காட்டலை ஏற்றுக்கொண்ட பிரதமர், தனது தவறைத் திருத்திக்கொண்டு அவரைப் மரியாதையுடன் அழைப்பதாகக் கூறி பேச்சைத் தொடர்ந்தார். இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நடந்த இந்தச் சம்பவத்தை வங்காள கலாசாரத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று கூறி திரிணாமுல் காங்கிரஸ் தற்போது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘பிரதமரின் பேச்சு, வங்காளத்தின் பாரம்பரியத்தை அவமதிக்கும் செயல்; இதற்கு பிரதமர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.
பிரதமரின் பேச்சைக் கண்டித்து கொல்கத்தா மற்றும் டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் மற்றும் தலைவர்கள் நேற்று அமைதிப் பேரணி நடத்தினர். ‘வரவிருக்கும் சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு வங்காளத்திற்கு எதிரான மனநிலையை பாஜக வெளிப்படுத்துகிறது’ என்று அவர்கள் குற்றம் சாட்டிய நிலையில், ‘திரிணாமுல் காங்கிரஸ் தேவையற்ற சர்ச்சையை உருவாக்கி நாடகமாடுகிறது’ என்று பாஜக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.


