Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நவீன இந்தியாவின் அடித்தளத்தை தகர்த்து நேருவின் வரலாற்றை மறைக்கிறார்கள்: சோனியா காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வரலாற்றை மறைக்க ஆளும் பாஜ அரசு முயல்வதாக சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுவதாகவும், அவரது வரலாற்றைத் திரித்துக் கூறுவதாகவும் ஒன்றிய பாஜ அரசு மீது காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற ‘நேரு சென்டர் இந்தியா’ எனும் டிஜிட்டல் காப்பகத் தொடக்க விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், ‘ஜவஹர்லால் நேருவை இழிவுபடுத்துவதையே ஆளும் வர்க்கம் தங்களின் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. நேருவை இழிவுபடுத்தவும், சிதைக்கவும், அவதூறு செய்யவும் திட்டமிட்ட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. நேருவை இழிவுபடுத்தும் திட்டம் ஆளும் கட்சியின் முக்கிய நோக்கம். நேருவை ஒரு ஆளுமையாக இல்லாமல் குறைப்பதுடன், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அவரது உலகளாவிய அங்கீகாரம் பெற்ற பங்கையும் குறைத்து மதிப்பிடுவதும், வரலாற்றை மீண்டும் திருத்தி எழுதும் ஒரு முரட்டுத்தனமான மற்றும் சுயநல முயற்சியில் அவரது மரபை அழிப்பதும் ஆகும்.

இது வெறும் நேருவின் சகாப்தத்தை அழிப்பதற்கான முயற்சி மட்டுமல்ல; சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக அவர் உருவாக்கிய நவீன இந்தியாவின் அடித்தளத்தையே தகர்க்கும் செயலாகும். அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்தில் எந்தப் பங்கும் வகிக்காதவர்கள் இன்று வரலாற்றைத் திரிக்கின்றனர். இத்தகைய பொய்ப் பிரசாரங்களை முறியடித்து, நேருவின் பாரம்பரியத்தையும் நாட்டின் அரசியலமைப்பு விழுமியங்களையும் பாதுகாக்க நாம் அனைவரும் தீவிரமாகப் போராட வேண்டும்’ என்று பேசினார்.

* காஷ்மீர், சீனாவில் நேருவின் தவறு: பாஜ பதிலடி

இந்தியாவின் எல்லைப்பகுதியை பாகிஸ்தான் மற்றும் சீனா ஆக்கிரமிக்க அனுமதித்தது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது போன்ற வரலாற்றுத் தவறுகள் தான் நேருவின் மரபு என்று பாஜ செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா சோனியாவுக்கு பதிலடி கொடுத்தார். அவர் கூறுகையில்,’ சோனியா காந்தி தனது குற்றச்சாட்டில் பயன்படுத்திய அழிவு என்ற வார்த்தை அவரது மகன் ராகுல் காந்திக்கு ஒத்தது. மகாராஷ்டிராவில் சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரேவின் கட்சிகளையும், டெல்லியில் மக்களவைத் தேர்தலின் போது கெஜ்ரிவாலையும், பீகாா் தேர்தலில் தேஜஸ்வி யாதவை அழித்த பிறகு, அவர் இப்போது உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவை அழிக்கச் செல்கிறார். நேருவின் மரபு அரசியலமைப்பில் 370வது பிரிவைச் சேர்ப்பது, சீனாவுக்கு வழங்க வசதியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராகும் வாய்ப்பை நிராகரிப்பதும் அடங்கும்’ என்றார்.