Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொழில் முனைவு மேம்பாட்டு திட்டத்தில் 2 பயனாளிகளுக்கு ரூ.14.92 லட்சம் மதிப்பில் நடமாடும் உணவகங்கள்

ஊட்டி : முதலமைச்சரின் தொழில் முனைவு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.14.92 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு பழங்குடியின பயனாளிகளுக்கு நடமாடும் உணவகத்திற்கான சாவிகளை தமிழ்நாடு தாட்கோ மேலாண்மை இயக்குனர் வழங்கினார்.

நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில், தாட்கோ மூலம் முதலமைச்சரின் தொழில் முனைவு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் முதன் முறையாக பழங்குடியினர் பயன்பெறும் வகையில் ரூ.14.92 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு பயனாளிகளுக்கு நடமாடும் உணவகத்துடன் கூடிய வாகனங்களுக்கான சாவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிறைய மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலை வகித்தார். தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி கலந்துகொண்டு வாகனத்திற்கான சாவிகளை வழங்கினார்.

தொடர்ந்து, நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்ற நாள் முதல் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

அதனடிப்படையில், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி (ம) மேம்பாட்டுக்கழகம் தாட்கோ மூலம், முதலமைச்சரின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர, பிரதம மந்திரி அனுசுசித் ஜாதி அபுய்தய் யோஜனா திட்டம், நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம், கல்வி கடன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு செயல் திட்டங்கள் ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நமது மாவட்டத்திலுள்ள பழங்குடியினர்கள் பயன்பெறும் வகையில் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவோர் திட்டத்தின்கீழ் இரண்டு பழங்குடியினர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் ரூ.14.92 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு நடமாடும் உணவகத்துடன் கூடிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வாகனங்கள் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் அதிகமாக பயன்படுத்தும் சாலையான சேரிங்கிராஸ் மற்றும் பழங்குடியினர் பண்பாட்டு மையம் ஆகிய பகுதிகளில் செயல்படும். மேலும், தாட்கோ மூலம் இதுபோன்று தமிழ்நாடு அரசின் திட்டங்கள் எளிதில் கடைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.

தொழில் முனைவு திட்டத்தின்கீழ் பயனடைந்த பரமேஸ்வரி கூறுகையில், ‘‘நான் குந்தா கோத்தகிரி பகுதியை சேர்ந்த கோத்தர் இன பெண். தாட்கோ மூலம் பழங்குடியின் பெண்களின் பொருளாதாரம் உயர வேண்டும் என்பதற்காக அரசால் நடமாடும் வாகனம் வழங்கப்பட்டது. இதனை நான் நவீன உணவகத்துடன் நடமாடும் வாகனமாக மாற்றுவேன். அதில் வரும் வருமானத்தை கொண்டு மற்ற செலவுகளை மேற்கொள்வேன்.

என்னைப் போன்ற பழங்குடியினர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது நன்றி’’ என்றார். இந்நிகழ்வில், தாட்கோ செயற்பொறியாளர் (கோவை) சரஸ்வதி, தாட்கோ பொது மேலாளர் (பொ) செந்தில் செல்வன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.