புளோரிடா: எம்எல்எஸ் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மயாமி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணியை வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. மேஜர் லீக் சாக்கர் (எம்எல்எஸ்) கோப்பை கால்பந்து போட்டிகள் அமெரிக்காவில் நடந்து வந்தன. இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மயாமி அணியும், ஜெர்மனியை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் தலைமையிலான வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணியும் மோதின.
போட்டியின் துவக்கம் முதல் மயாமி அணி வீரர்கள் ஆக்ரோஷமாக செயல்பட்டு கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். போட்டியின் பெரும் பகுதி நேரம், அவர்களின் கட்டுப்பாட்டிலேயே பந்து இருந்தது. அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி அட்டகாசமாக ஆடி தனது அணி வீரர்கள் கோல் போடுவதற்கான சூழ்நிலையை உருவாக்கி தந்தார்.
மெஸ்ஸி லாவகமாக தட்டித்தந்த பந்தை, மயாமி அணி வீரர்கள் எடியர் ஒகாம்போ, ரோட்ரிகோ டி பால் கோல்கள் ஆக்கினர். தவிர, மயாமியின் டாடியோ அலெண்டோ 90+6 நிமிடத்தில் தனது அணிக்காக 3வது கோல் போட்டார். மாறாக, வான்கூவர் அணியின் அலி அஹமது, போட்டியின் 60வது நிமிடத்தில் ஒரு கோல் மட்டுமே போட்டார்.
அதனால், 3-1 என்ற கோல் கணக்கில் இன்டர் மயாமி அணி மகத்தான வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம், எம்எல்எஸ் கால்பந்து போட்டியில் இன்டர் மயாமி அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. எம்எல்எஸ் கோப்பை தொடரின் அதி மதிப்பு மிக்க வீரர் என்ற கவுரவம், மெஸ்ஸிக்கு அளிக்கப்பட்டது. அவர் கூறுகையில், ‘இந்த தருணத்துக்காகவே நான் நெடுங்காலம் காத்திருந்தேன். ஒரு அணியாக இந்த சாதனையை நாங்கள் அரங்கேற்றி உள்ளோம்’ என்றார்.


