புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று அமைச்சரக ஜான்குமார் பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் 3 நியமன எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் செல்வம் பதவிப்பிரமாணம் ெசய்து வைத்தார். புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பாஜகவைச் சேர்ந்த ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார் தனது பதவியை கடந்த மாதம் 27ம் தேதி ராஜினாமா செய்தார். இதேபோல் பாஜவை சேர்ந்த நியமன எம்எல்ஏக்களான வி.பி ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
ராஜினாமா செய்த சாய் சரவணன் குமாருக்கு பதிலாக காமராஜர் நகர் தொகுதி பாஜ எம்எல்ஏ ஜான்குமாருக்கு அமைச்சர் பதவிக்கு முதல்வர் பரிந்துரை செய்தார். அதேபோல் ராஜினாமா செய்த 3 எம்எல்ஏக்களுக்கு பதில் முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான், காரைக்காலை சேர்ந்த ஜிஎன்எஸ் ராஜசேகரன், செல்வம் ஆகியோரை நியமன எம்எல்ஏக்களாக ஒன்றிய அரசு நியமித்தது. இதையடுத்து 3 நியமன எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா சட்டசபை வளாகத்தில் இன்று நடந்தது. சபாநாயகர் செல்வம், மூன்று நியமன எம்எல்ஏக்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதன்பின் புதிய அமைச்சராக ஜான்குமார் இன்று பதவியேற்றார். கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் அமைச்சர் ஜான்குமாருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி, சாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம் மற்றும் எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பாஜ., என்ஆர் காங் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.