Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கான ஜிஎஸ்டி தொகையை தமிழகஅரசு வழங்கும்: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

சென்னை: எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கான ஜிஎஸ்டி தொகையை தமிழக அரசு வழங்கும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். 2025-26ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கையின் மீது நடந்த விவாதத்தில் கொ.தே.ம.க. எம்எல்ஏல் ஈஸ்வரன் (திருச்செங்கோடு) பேசியதாவது: 2021ம் ஆண்டில் இந்த அரசு அமைந்தபோது, என்ன சூழ்நிலையில் அமைந்தது என்பது எல்லோருக்குமே தெரியும். கொரோனா, வருமானம் கிடையாது, செலவுகள் அதிகம். அப்படிப்பட்ட நிலையில்தான் ஆட்சி அமைந்தது.

அதற்கு பிறகு, ஒன்றிய அரசிடமிருந்து எந்தவிதமான நிதியுதவியும் இல்லாமல், தடுமாறிக் கொண்டிருக்கிற அரசாக நாம் இருந்தோம். ஆனால், இன்றைக்கு அதையெல்லாம் தாண்டி, தமிழ்நாட்டினுடைய மாநில அரசு நிதியை ஒதுக்கி, பல்வேறு திட்டங்களை நடத்தக்கூடிய அளவிற்கு நாம் வந்திருக்கிறோம். ஜிஎஸ்டி வரி வசூல் செய்து, செய்து ஒன்றிய அரசிற்கு கொடுத்துக்கொண்டே இருக்கிறோம். மற்ற மாநிலங்களில் எப்படி செய்கிறார்கள் என்று தெரியாது. ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரை, தமிழ்நாட்டினுடைய வணிக வரித் துறை மிகச் சிறப்பாக இயங்குகிறதென்று சொன்னால், வியாபாரிகளும், தொழில் செய்பவர்களும் இன்றைக்கு வருத்தப்படுகிறார்கள்.

அதை தாண்டிதான் நாம் அதிக நிதியை வசூல் செய்து கொடுக்கிறோம். அதேபோலதான், ஒன்றிய அரசு நிதி கொடுத்திருந்தால், சொத்து வரியை ஏற்றியிருக்க வேண்டிய அவசியம் கிடையாது. சொத்து வரியை உயர்த்தியதன் மூலமாக மக்கள் விரும்பாத ஒரு செயலை நாம் செய்ததாக இன்றைக்கு பேசும் பொருளாகியிருக்கிறோம். நகரப் பகுதிகளிலே அந்தச் சொத்து வரியைக் குறைப்பதற்கு அமைச்சர் முன்வர வேண்டும். அதேபோல, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதிக்கு ஜிஎஸ்டியை தவிர்த்து, அந்த ஜிஎஸ்டி பணம், அந்தத் தொகை பயன்பாட்டுக்குக் கொடுக்கப்படும் என்று சென்ற ஆண்டே அறிவிக்கப்பட்டது.

இப்போது அதை கொடுப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது. ஆனால், அதிலே 31-3-2026-க்கு பின்னால் நிதி கொடுக்கப்படும் என்றிருப்பதாக சந்தேகப்படுகிறார்கள். 31-3-2026க்கு பிறகு நிதி கொடுத்து அந்த நிதியைப் பயன்படுத்த முடியுமா? என்றார். இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசியதாவது: ரூ.3 கோடி உங்களுக்கு கொடுப்பதிலிருந்து, 3 கோடிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய வளர்ச்சித் திட்டப் பணிகளிலிருந்து ரூ.3 கோடிக்கும் நீங்கள் பணிகளை முழுமையாக எடுத்துச் செய்யலாம்.

அதிலே உங்களுக்கு ஜிஎஸ்டி தொகை பிடித்துக்கொண்டு, மீதி இருக்கக்கூடிய தொகைக்கு இல்லை. ரூ.3 கோடிக்கும் மொத்தமாக அந்தப் பணிகளை நீங்கள் மேற்கொள்ளலாம். அந்தப் பணிகளை நீங்கள் முடித்ததற்கு பிறகு, அந்த பில்லை கொடுத்த பிறகு, ஒருங்கிணைக்கப்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக அரசாங்கத்திற்கு வருகிறபோது, அதற்கு என்ன ஜிஎஸ்டி தொகை வந்துள்ளதோ முழுவதுமாக திருப்பி வழங்கப்படும். மொத்தமாக ரூ.3 கோடியே 54 லட்சம். 54 லட்சம் என்பது ஜிஎஸ்டி சரிசெய்யவே வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பதிலளித்தார்.