எம்எல்ஏக்கள் விடுதியில் அத்துமீறல் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு: சென்னையில் பெரும் பரபரப்பு
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் நேற்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏக்கள் தங்கும் அரசு விடுதிக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு ஒன்று சோதனை நடத்தச் சென்றது. அப்போது, விடுதி வளாகத்திற்குள் நுழைவதற்கும், அங்குள்ள அறைகளை சோதனையிடுவதற்கும் சட்டமன்ற செயலகத்திடம் உரிய முன்அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. தடையை மீறி அதிகாரிகள் விடுதிக்குள் நுழைந்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இது சட்டமன்றத்தின் சிறப்புரிமைகளை மீறிய செயல் எனக் கூறி, சட்டமன்ற செயலாளர் சார்பில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை ஏற்றுக்கொண்ட திருவல்லிக்கேணி காவல்துறையினர், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அத்துமீறி நுழைதல் மற்றும் அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 4 அமலாக்கத்துறை அதிகாரிகள், 2 ஒன்றிய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப் ) வீரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருபுறம் அமைச்சர் மீதான அமலாக்கத்துறையின் விசாரணை நடைபெற்று வரும் அதே வேளையில், மறுபுறம் விசாரணை நடத்தச் சென்ற அதிகாரிகள் மீது மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.