Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

எம்எல்ஏ பதவியை உதறிவிட்டு வந்ததற்கு கொடுக்கும் பரிசுதான் பதினோரு பேருல ஒருத்தரா என புலம்பும் பெண்மணி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘பல நூறு சி சொத்துகள் வாங்கி குவிச்ச வெடி பாதுகாப்பு ஆபிசர் சிக்கியதும், விசாரணையும் தான் பரபரப்பு பேச்சா போய்கிட்டிருக்காமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டம் காட்டுப் பாடியில பிஇஎஸ்ஓ என்னும் பெட்ரோலியம் மற்றும் வெடி மருந்து பாதுகாப்பு அமைப்பின் சர்க்கிள் ஆபீசராக முழுமுதற் கடவுள் பெயர் கொண்டவர் இருக்கிறாரு.. இவரு 10 மாவட்டத்துக்கும் ஆபிசராம்.. பெட்ரோல் பங்க், எரிபொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், வெடி மருந்து தயாரிப்பு தொழிற்சாலைகள்னு எல்லாத்துக்கும் உரிமம் வழங்குற பணியை மேற்கொண்டு வந்தாரு..

கடந்த சில ஆண்டுகளாகவே ஒவ்வொரு மாவட்டத்துலயும் தனிதனி நபர்களை நியமிச்சு தீவிரமா வசூல் வேட்டை நடத்தியிருக்குறாரு.. தீபாவளி பண்டிகையை பயன்படுத்தி பட்டாசு கடைகளையும் விடலையாம்.. இவரை வெயிலூர்ல பிடிக்க சிபிஐயும், விஜிலென்ஸ்சும் கண்காணிக்கும் பணியை தொடங்கினாங்களாம்.. ஆனா, இதை தெரிஞ்சுகிட்டு, வெயிலூர்ல இருந்து சேலத்துக்கு ஷிப்ட் ஆகி தனியார் ஓட்டல்ல வசூல் நடத்தியிருக்குறாரு.. சிபிஐ அங்கேயே போய் சுற்றி வளைச்சிட்டாங்களாம்.. அவர்கிட்ட இருந்து இரண்டரை சி பறிமுதல் செய்திருக்குறாங்க..

இவரோட சொத்து விவரங்களை விசாரணை செய்யும் பணி தொடங்கியிருக்குதாம்.. இதுல அதிகாரிகளே அதிர்ச்சி அடையுற வகையில் சென்னையில் பிரபல இடங்கள்ல பல நூறு சி சொத்துகள் வாங்கி குவிச்சிருக்குறாராம்.. ஒவ்வொரு மாவட்டத்துலயும், கலெக்‌ஷன் விவரங்களை எடுத்து விசாரணை தொடங்கியிருக்குதாம்.. இதுதொடர்பாக தீவிர விசாரணை செய்தால் பல உண்மைகள் இன்னும் வெளிச்சத்துக்கு வருமாம்.. இந்த விவகாரத்தில் மேலும் சிலர் சிக்குவாங்கன்னு பரபரப்பு பேச்சாக இருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இந்த பொறுப்புக்காக தான் சமஉ பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்தேனா என மலராத கட்சிக்கு தாவிய விஜயமான பெண்மணி நொந்து புலம்புறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்தில் கதர்கட்சியில் சமஉ பதவியை உதறிவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் சீட் கிடைக்கும் என்ற ஆசையில் மலராத கட்சிக்கு தாவிய விஜயமான பெண்மணிக்கு சீட் பெறுவதில் தோல்வியே மிஞ்சியது.. அடுத்து மாநில அளவில் பதவி வரும், தேசிய அளவில் பதவி தருவார்கள் என்று காண்போரிடம் எல்லாம் கூறி நம்பிக்கையுடன் இருந்து வந்தருக்கு மலராத கட்சி இப்போது பொறுப்புகளை வழங்கி திக்குமுக்காட வைத்துள்ளது என்று கதர் கட்சியினர் நக்கல் அடிக்கின்றனராம்..

மாநில செயற்குழு உறுப்பினர்களாக 11 பேரை நியமித்துள்ளதில் ஒருவராக விஜயமான பெண்மணியும் நியமிக்கப்பட்டுள்ளாராம்.. மேலும் எந்த தொகுதியை கை கழுவினாரோ அந்த தொகுதியில் சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராகவும் நியமித்துள்ளார்களாம்.. இதற்காகவா சமஉ பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்தேன் என்று நொந்து போயுள்ளாராம் விஜயமானவர்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கிட்னி மாற்று புதுமோசடியால் யூனியன் பிரதேச சுகாதாரத்துறையில் முணுமுணுப்பு ஏற்பட்டுள்ளதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘உடல் உறுப்புகளில் ஒன்றான கிட்னி சிலருக்கு சட்னியாக வறுமையை பயன்படுத்தி ‘மாற்று’ பெயரில் கோடிக்கணக்கில் ப விட்டமின் பார்த்த ஏஜென்ட்களின் சதிகள் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்ததாம்.. தமிழகத்தில் சில தனியார் மருத்துவமனைகள் சிக்கிக் கொள்ள, அனுமதி ரத்தானதாம்.. இதில் தொடர்புடைய இரண்டு பெரும் புள்ளிகள் இத்தொழில் வலையை அண்டை யூனியான புதுச்சேரிக்குள் வீசி இருக்கிறார்களாம்.. புறநகரில் உள்ள பிரபல மருத்துவமனையில் ஒரேநாளில் அடுத்தடுத்து நடந்த கிட்னி மாற்று சிகிச்சை தொடர்பான தகவல்கள் கசிய, போலி ஆவணங்கள் மூலமாக புதுமோசடியை அரங்கேற்றி வருகிறதாம்..

சுகாதாரத் துறைக்கு எழுத்துப்பூர்வ புகார் ஏதும் வராததால் விஷயம் கசிந்தும் அமைதி காக்கிறதாம்.. இதனால் பூர்வீக மருத்துவர்களின் தொழில் பாதிக்க புலம்பி வருகிறார்களாம்.. சின்னஞ்சிறு யூனியனை அண்டை வீட்டார் பகடைக்காயாக பயன்படுத்துவதை புல்லட்சாமி அரசு வேடிக்கை பார்ப்பதா என்ற முணுமுணுப்பு சுகாதார சிகிச்சை அரங்குகளில் ஆங்காங்கே ஒலிக்கிறதாம்.. இதுபற்றிதான் புதுச்சேரி வட்டாரத்தில் பரவலாக பேச்சு ஓடுகிறது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேர்தலில் வாரிசுக்கு சீட் கிடைத்தால் விட்டமின் ப மூலம் நினைத்ததை சாதிக்கலாம் என்ற ஆசையில் புலம்பித் தவிக்கிறாராமே இலைக்கட்சி மாஜி..’’ என்றார் பீட்டார் மாமா. ‘‘நெற்களஞ்சியம் மாவட்டத்தை சேர்ந்த வைத்தியானவர் தன்னை பார்க்க வரும் நிர்வாகிகள் மற்றும் நெருங்கியவர்களிடம் புலம்பி தவித்து வருகிறாராம்.. வரும் சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய வாரிசுக்கு சீட் வாங்க வேண்டும் என்பதில் ரொம்பவும் குறிக்கோளாக உள்ளாராம்..

சீட் கிடைத்தாலும், ஜெயிப்பது என்பது இயலாத காரியமாக இருக்காம்.. முக்கியமாக, சீட் கிடைப்பதே பெரும் சவாலாக உள்ளதாம்.. ஒருவேளை சீட் கிடைத்தால், ‘விட்டமின் ப’ மூலம் நினைத்ததை சாதித்து விடலாம் என அவர் நினைக்கிறாராம்.. முக்கியமாக, வைத்தியானவர் தரப்பிற்கு தேர்தலில் சீட் கொடுக்க கூடாது என்பதில், அவருடைய பழைய நண்பர்கள் திரைமறைவில் படுசூப்பராக வேலை செய்து வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.