எம்எல்ஏவாக பதவியேற்ற அடுத்த நாளே கனத்த இதயத்துடன் ராஜினாமா செய்கிறேன்: சிக்கிம் முதல்வரின் மனைவி பரபரப்பு பேட்டி
காங்டாக்: எம்எல்ஏவாக பதவியேற்ற அடுத்த நாளே சிக்கிம் முதல்வரின் மனைவி தனது எம்எல்ஏ பதவியை திடீரென ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்களவை தேர்தலுடன் சிக்கிம் மாநில சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. சிக்கிம் மாநிலத்தின் சிக்கிம் கிராந்திக்காரி மோர்ச்சா அமோக வெற்றிப் பெற்றதால், மீண்டும் முதல்வராக பிரேம்சிங் தமாங் பதவியேற்றார். இவருடைய மனைவி கிருஷ்ணகுமாரி ராய், நாம்ச்சி சிங்கிதாங் தொகுதியில் போட்டியிட்டு, சிக்கிம் ஜனநாயக முன்னணி வேட்பாளர் பிமல் ராயை தோற்கடித்து வென்றார். தொடர்ந்து கடந்த புதன் கிழமை புதிய எம்எல்ஏவாக பதவியேற்றார். இந்நிலையில், பதவியேற்ற அடுத்த நாளே (நேற்று) தனது பதவியை ராஜினாமா செய்வதாக கிருஷ்ணகுமாரி ராய் அறிவித்தார். அவருடைய ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் எம்.என் ஷெர்பா ஏற்றுக்கொண்டதாக சட்டசபை செயலாளர் லலித் குமார் குருங் உறுதி செய்திருக்கிறார்.
இதற்கிடையே அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்வராக பெமா காண்டு பதவியேற்கும் விழாவுக்கு சென்ற சிக்கிம் முதல்வர் பிரேம்சிங் தமாங், அங்கு உரையாற்றினார். அப்போது, அவரது மனைவியின் ராஜினாமா குறித்து கூறுகையில், `கட்சியின் நலன், நல்ல நோக்கங்களுக்காக என் மனைவி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என்பதை சிக்கிம் மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். எங்களது கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் வேண்டுகோளின்படி, அவர் எங்கள் கட்சியின் நலனுக்காக தேர்தலில் போட்டியிட்டார். விரைவில் புதிய வேட்பாளரை தேர்ந்தெடுத்து தொகுதி பயனடைவதை உறுதிசெய்வோம்’ என்றார்.
முன்னதாக கிருஷ்ண குமாரி ராய் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘மிகவும் கனத்த இதயத்துடன், நாம்சி-சிங்கிதாங் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன். அரசியலை சமூக நடவடிக்கையாகவே பார்க்கிறேன்.
கட்சியின் வேண்டுகோளை ஏற்று தேர்தலில் போட்டியிட்டேன். தற்போது கட்சியின் முடிவை ஏற்று ராஜினாமா செய்கிறேன். மக்களுக்காக தொடர்ந்து சேவை செய்வேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். முதல்வரின் மனைவி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான உண்மையான காரணம் வெளியாகாத நிலையில், கணவனும் மனைவியும் கட்சியை காரணம் காட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.