கலசப்பாக்கம் : கலசப்பாக்கம் அருகே தொடர் மழையால் சேதமான தரைப்பாலத்தை எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் நேரில் ஆய்வு செய்தார்.கலசப்பாக்கம் பகுதியில் தொடர் மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. செய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், மிருகண்டா அணை திறந்து விடப்பட்டுள்ளதால் 17 ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை திறப்பால் கெங்கல மகாதேவி கிராமத்தில் உள்ள தரைப்பாலம் சேதம் அடைந்துள்ளது.
இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து தகவல் அறிந்த எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதன்பேரில் பாலம் சீரமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
மேலும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் உயர்மட்ட பாலம் கட்ட அமைச்சர் எ.வ.வேலுவிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
அப்போது, ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் அன்பரசி ராஜசேகரன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் முருகதாஸ், மாவட்ட பிரதிநிதி முருகையன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ரூ.1.38 லட்சத்தில் பள்ளி கட்டிடம், துணை சுகாதார நிலையம்:
கலசப்பாக்கம் ஒன்றியம், மட்டவெட்டு கிராமத்தில் ரூ.45.15 லட்சம் மதிப்பில் அரசு துணை சுகாதார நிலையம், கீழ்குப்பம் கிராமத்தில் ரூ.92.83 லட்சம் மதிப்பில் பள்ளி கட்டிடம் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் தலைமை தாங்கி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
பிடிஓ பாலமுருகன், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் அன்பரசி ராஜசேகரன், மாவட்ட பிரதிநிதி முருகையன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தணிகைமலை, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பிரசன்னா, முருகன், அல்லி, கோவிந்தன், ஊராட்சி செயலாளர்கள் செல்வம், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.