Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த உலக புத்தொழில் மாநாடு வெற்றி ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் தொடங்கி வைத்த உலக புத்தொழில் மாநாட்டில் 45 நாடுகள் பங்கேற்று ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. உலக புத்தொழில் மாநாட்டை கோவையில் உள்ள கொடிசியா வர்த்தக வளாகத்தில் கடந்த 9ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் பேசிய முதல்வர், தமிழ்நாட்டில் முதலீட்டு சூழலை வலுப்படுத்தும் நோக்கில் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீட்டில் இணை உருவாக்க நிதியத்தினை அறிவித்தார்.

இதையடுத்து பெல்ஜியம் நாட்டினை சேர்ந்த ஹப் பிரசல்ஸ் என்னும் அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட 2 தமிழ்நாட்டினை சேர்ந்த புத்தொழில் நிறுவனங்களுக்கு அந்நாட்டில் நிறுவனங்களின் விரிவு செய்வதற்கு அனுமதி கடிதங்களை  வழங்கியது. குறிப்பாக 2 நாட்களில் 72,278 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இது நாட்டின் மிகப்பெரிய புத்தொழில் மாநாடாக அமைந்தது. மாநாட்டில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் 609 ஆளுமைகள் உரை நிகழ்த்தியுள்ளனர்.

தொழில் முனைவு ஆளுமைகள் பலரும் இணைந்து கொள்கை வடிவமைப்பு புத்தாக்க தொழில்கள், நிலைத்த வளர்ச்சி மற்றும் உலக நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்தனர். முதலீட்டாளர் சந்திப்பு அமர்வுகள் மாநாட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அமைந்தன. 115 முதலீட்டாளர்கள் பங்கேற்றனர். 453 புத்தொழில் நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் முன் தங்களது நிறுவனங்களை அறிமுகப்படுத்தினர்.

இதன் மூலம் முதலீட்டு வாய்ப்புகள் வழிகாட்டுதல் மற்றும் இணைப்பு முயற்சிகள் உருவாகின. மாநாட்டுக்கு முன்பாக ரூ.127.09 கோடி முதலீட்டு உறுதிப்பாடு கிடைத்தது. மேலும் பல ஒப்பந்தங்கள் அடுத்த மாதங்களில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1012 அரங்குகளுடன் மாபெரும் புத்தொழில் மற்றும் புத்தாக்க கண்காட்சி நடைபெற்றது. இதில் 21 நாடுகளில் இருந்து அரங்குகள் அமைத்திருந்தனர்.

12 பெரு நிறுவனங்கள், இந்தியாவின் பிற மாநிலங்களை சார்ந்த 8 புத்தொழில் இயக்கங்கள், புத்தொழில் மற்றும் புத்தாக்க தொழில் முனைவோர்களுக்கு ஆதரவு தரும் தமிழ்நாடு மற்றும் ஒன்றிய அரசின் துறைகள் அனைத்தும் பங்கேற்று இருந்தன. கோவையை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர்களுக்கான பிரத்யேகமான அரங்கம் ஆகியவையும் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தன. கூகுள், மெட்டா, போன்பே போன்ற நிறுவனங்களின் தனித்துவமான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

பிரான்ஸ் நாட்டின் லிங்க் இன்னோவேஷன்ஸ், கனடா நாட்டின் ஆர்எக்ஸ்என்ஹப், ஜெர்மனி நாட்டின் ஆசியா பெர்லின் அமைப்பு உள்ளிட்ட பன்னாட்டு தொழில் அமைப்புகள் மற்றும் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறி கொள்ளப்பட்டுள்ளன. 2 நாட்களில் மொத்தம் 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறி கொள்ளப்பட்டன.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு உலகளாவிய அளவில் புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகும்.  மேலும் சிறப்பு வாய்ந்த தொழில்வளர் பயிற்சிகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படும். தமிழ்நாட்டின் புத்தொழில் சூழல் வலுப்பெற்று முதலீட்டாளர்களின் நம்பிக்கை உயர்ந்து வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். இது தமிழ்நாட்டை 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் இலக்கை நோக்கி நகர்த்தும் முக்கிய அடித்தளமாக அமைந்தது.