சென்னை: கிண்டியில் சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார் சிலையை திறந்தமைக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிவகங்கை சமஸ்தான ராணி மதுராந்தகிரிநாச்சியார் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய வரலாற்றில் முதல் பெண்மணியாக சுதந்திரத்திற்காக தனித்து நின்று போராடிய வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் புகழை போற்றுகின்ற வகையில் சிவகங்கை மாவட்டத்தில் இவ்வீரப் பெண்மணிக்கு நினைவு மண்டபம் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டு, சிறப்பு சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் புகழை பறைசாற்றுகின்ற வகையில் தற்போது சென்னை, காந்தி மண்டபத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வீரமங்கை ராணி வேலுநாச்சியார் திருவுருவச் சிலையினை முதல்வர் திறந்து வைத்து சிறப்பித்துள்ளார். வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் புகழை போற்றுகின்ற வகையிலும், பறைசாற்றுகின்ற வகையிலும், சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு முதல்வருக்கு சிவகங்கை சமஸ்தானம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.