Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொடர்ந்து 2வது முறையாக மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனார் என்ற வரலாற்றை படைப்பதே நான் எதிர்பார்க்கும் மாபெரும் பரிசு: பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் அறிக்கை

சென்னை: தொடர்ந்து 2வது முறையாக மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனார் என்ற வரலாற்றை படைப்பதே நான் எதிர்பார்க்கும் மாபெரும் பரிசு என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: எனது பிறந்தநாளில் தமிழ்நாட்டின் எட்டுத்திக்கிலிருந்தும் வந்த உங்கள் வாழ்த்தொலி இந்த பிறந்த நாளையும் சிறந்த நாளாக்கி இருக்கிறது.

பிறந்த நாளையொட்டி, திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்மை வாழ்த்தியதோடு மட்டுமின்றி, இளைஞரணியின் செயலாளராக-விளையாட்டுத்துறையின் அமைச்சராக-துணை முதல்வராக நம் பணிகளை போற்றி பாராட்டியதை எண்ணி மகிழ்ந்தேன். தந்தையாகவும்- தலைவராகவும் வாழ்த்தி வழிகாட்டிய நம் முதல்வருக்கு இந்த நேரத்தில் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

அமைச்சர்கள், நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் என கலைஞரின் உடன்பிறப்புகள் என்னிடம் காட்டியது கழக பாசத்தையும் விஞ்சிய குடும்பப் பாசம் என்பதை உளப்பூர்வமாக உணர்ந்தேன். மாநிலம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆக்கப்பூர்வமான முறையிலும் கொள்கை வழியிலும் நிகழ்ச்சிகளை நடத்திவரும் திமுகவினருக்கு நன்றி.

தேடித்தேடி வாங்கிய புத்தகங்கள், கருப்பு-சிவப்பு வேட்டி, விளையாட்டு உபகரணங்கள்-சட்டமன்றத் தேர்தலுக்கான நிதி-இளைஞர் அணி வளர்ச்சி நிதி-மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், நினைவலைகளை எழுப்பும் புகைப்படங்கள் என நீங்கள் வழங்கிய பிறந்தநாள் பரிசு எனது மனதை நிறைத்திருக்கிறது. நேரில் வாழ்த்திய மநீம தலைவர் கமல், விசிக தலைவர் திருமாவளவன், தொலைபேசியில் என்னை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட அனைவருக்கும் நன்றி.

வாழ்த்துச் செய்தியாகவும், சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்திய தோழமை இயக்க தலைவர்கள், நிர்வாகிகளுக்கு நன்றி. என்னை நேரில் சந்தித்து வாழ்த்திய தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகள் உள்பட அனைவருக்கும் என் நன்றி. அன்பு ததும்பும் வாழ்த்துகளில் நெகிழ வைத்த திரையுலக உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நன்றிகள் பல.

பெரியார் திடலில் என் பிறந்த நாளையொட்டி திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி உள்பட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை ஏற்பாடு செய்து, அதில் என்னை பங்கேற்கச் செய்த சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் சேகர்பாபுவுக்கும் நன்றி. தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும் உரிமைகளுக்கும் இன்னும் கடுமையாக உழைப்பது தான் உங்களது அளவிலா அன்பிற்கு நான் செய்யும் கைமாறாக இருக்கும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ள பிறந்தநாள் அறிவுரையின்படி, மக்களுக்காக களத்தில் நிற்பதும்-திராவிட இயக்க கருத்தியலை பரப்புவதும் என்கிற பணிகளை இன்னும் வேகமாக தொடர்வோம். இந்த பிறந்த நாளில் நான் எத்தனையோ பரிசுகளை பெற்றிருந்தாலும், 2026ல் திமுக 7வது முறையாக வென்றது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 2வது முறையாக முதல்வர் ஆனார் என்ற வரலாற்றை படைப்பதே நான் எதிர்பார்க்கும் மாபெரும் பரிசு. அந்த இலக்கை நோக்கி உடன்பிறப்புகள் நாம் ஒற்றுமையுடன் கரம் பற்றி நடைபோடுவோம். வாழ்த்துகளைக் குவித்த அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும். வெல்வோம் இருநூறு! படைப்போம் வரலாறு.