Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாசனப்பரப்பை காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து உத்தரவிட்டமைக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு விவசாய பெருமக்கள் நன்றி

சென்னை: காட்டுமன்னார்கோயில் வட்டத்திலுள்ள திருமுட்டம் வருவாய் வட்டத்தைச் சார்ந்த 38 வருவாய் கிராமங்களின் பாசனப்பரப்பை காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து உத்தரவிட்டமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு அப்பகுதி விவசாய பெருமக்கள் நன்றி தெரிவித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (27.11.2025) தலைமைச் செயலகத்தில், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டத்திலுள்ள திருமுட்டம் வருவாய் வட்டத்தைச் சார்ந்த 38 வருவாய் கிராமங்களின் பாசனப்பரப்பை காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து அப்பகுதி உழவர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடைந்திட உத்தரவிட்டமைக்காக வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலையில் காட்டுமன்னார்கோயில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் மற்றும் அப்பகுதி உழவர் பெருமக்கள் சந்தித்து தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் வேளாண்மைக்கென ஐந்து தனி நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பிக்கப்பட்டு, பல்வேறு உழவர் நலத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன. மேலும், தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்வாதாரத் தொழிலாக உள்ள வேளாண்மையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் நலனை மேம்படுத்திடும் நோக்கத்தில், 2025-26ஆம் ஆண்டிலும் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், 2025 குறுவைப்பருவத்திற்கு குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் 82 கோடியே 77 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டதுடன், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம், முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள், மாற்றுப்பயிர் சாகுபடித்திட்டம், பயிர்க்காப்பீடு, இலவச வேளாண் மின் இணைப்புகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு வளாகங்கள் அமைத்தல், நெல்லுக்கான ஊக்கத்தொகை, மின்னணு வேளாண் சந்தைகள், இ-வாடகை மையங்கள் மூலம் வேளாண் இயந்திரங்களை எளிதில் வாடகைக்குப் பெறும் திட்டம், “சி” மற்றும் “டி” வாய்க்கால்கள் தூர்வாருதல், மின்மோட்டார் பம்புசெட்டுகள், உழவர் சந்தைகள், வேளாண் விளைபொருட்களுக்கு மதிப்புக்கூட்டும் அலகுகள் அமைக்கும் சிறப்புத்திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டத்திலிருந்து புதிதாக பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட திருமுட்டம் வட்டத்திலுள்ள 38 வருவாய் கிராமங்களும் காவிரி டெல்டா பாசனப்பகுதியாக அறிவிக்கப்பட வேண்டுமென்பது அப்பகுதி விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது, இதனை கனிவுடன் பரிசீலித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கடலூர் மாவட்டத்தில் 15.07.2025 அன்று நடைபெற்ற அரசு விழாவில் காட்டுமன்னார் கோயில் வட்டத்திலிருந்து புதிதாக பிரிக்கப்பட்டுள்ள ஸ்ரீமுஷ்ணம் வட்டத்திற்கும், காவிரி டெல்டா பகுதிக்காக செயல்படுத்தப்படும் சிறப்புத்திட்டங்களின் பயன்கள் கிடைக்கும் வகையில், ஸ்ரீமுஷ்ணம் வட்டம் காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்கப்படும் என்று அறிவித்தார்கள்.

இதனைத்தொடர்ந்து காட்டுமன்னார்கோயில் வட்டத்திலுள்ள திருமுட்டம் வருவாய் வட்டத்தைச் சார்ந்த 38 வருவாய் கிராமங்களின் பாசனப்பரப்பை காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து 21.11.2025 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. இதன்மூலம் காவிரி பாசனப்பரப்பிற்கு அளிக்கப்படும் குறுவை சிறப்புத்திட்டம் உள்ளிட்ட சிறப்புத்திட்டங்கள் அனைத்தும் அப்பகுதி கடைக்கோடி விவசாயிக்கும் கிடைக்கும்.

ஏற்கனவே, கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோயில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் குமராட்சி வட்டாரங்கள் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம், 2020-இன் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள திருமுட்டம் வட்டத்திலுள்ள 38 வருவாய் கிராமங்களையும் இச்சட்டத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன்மூலம், வேளாண் நிலங்கள் பாதுகாக்கப்படுவதுடன், நிலையான வேளாண் மேம்பாட்டிற்காக வேளாண் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களும் மேம்படுத்தப்படும்.