மு.க.முத்து மறைவால் நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்ததால் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தலைசுற்றல்: தற்போது நலமுடன் உள்ளார், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சென்னை: சகோதரர் மு.க.முத்து மறைவால் நாள் முழுவதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சாப்பிடாமல் இருந்ததால் தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாவும் தற்போது நன்றாக உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை நெற்குன்றம், என்.டி.பட்டேல் சாலையில் உள்ள ஜி.எம்.மஹாலில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
அதிமுக ஆட்சியில் அம்மா உப்பு, அம்மா குடிநீர் என செயல்படுத்தி இருந்தனர். ஆனால் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் பெயரை எடப்பாடி பழனிசாமி விமர்சிப்பது தவறு. எதிர்க்கட்சி தலைவர் முதலமைச்சரை ஒருமையில் விமர்சிப்பது சரியான நாகரீகம் அல்ல. முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றாக உள்ளார். சகோதரர் மு.க.முத்து மறைவால் ஒருநாள் முழுவதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சாப்பிடாமல் பல்வேறு பணிகள் மேற்கொண்டு இறுதி சடங்கு வரை இருந்துள்ளார்.
அதற்கு மறுநாள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் வரை வாக்கிங் சென்றபோது முதல்வருக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்போது நலமுடன் உள்ளார். அப்போலோ மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ் எனும் தகவல் வரும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கா.கணபதி, தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதார் ரசூல், வளசரவாக்கம் மண்டலக்குழுத்தலைவர் நொளம்பூர் வெ.ராஜன், மாமன்ற உறுப்பினர் வி.கிரிதரன், மண்டல அலுவலர் பி.பானுகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை, அவரது சகோதரர் மு.க அழகிரி நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது மருத்துவமனை வளாகத்தில் நிருபர்களை சந்தித்த அவர், ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமோடு இருக்கிறார், இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்புவார்’’ என கூறினார்.
எச்சரிக்கை: முதல்வரின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்போலோ மருத்துவமனை தரப்பில் அளிக்கப்படும் அறிக்கையை தவிர மற்ற தகவல்கள் உண்மை அல்ல என தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.