ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்: எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன் என நெகிழ்ச்சி
சென்னை: அயல்நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தை 2030க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீட்டை தமிழகத்திற்கு ஈர்க்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் உள்ள தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழு, அந்நாடுகளுக்கு எட்டு நாட்கள் பயணமாக, கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி காலை சென்னையிலிருந்து ஜெர்மனி சென்றனர். முதலில் ஜெர்மனி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சோ்ந்தவர்களுடனும், முதலீட்டாளர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, லண்டன் நகருக்குச் சென்ற அவர், முதலீடுகளை ஈா்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்துஜா குழுமம் உள்பட பல்வேறு பெருந்தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுடன் ஆலோசனைகளை நடத்தி முதலீடுகளை ஈர்த்தார். இந்த பயணத்தால், தமிழகத்துக்கு மொத்தம் ரூ.15,516 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 17,613 நபருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன. இங்கிலாந்து முதலீட்டாளர்கள் சந்திப்புகளுக்கு முன், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழு ஜெர்மனியிடம் இருந்து, 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக, ரூ.7,020 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. இதன் வாயிலாக, 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை, விண்வெளி, விரிவான தொழில்நுட்பம், ரயில்வே, ஆட்டோமோட்டிவ், மின்னணுவியல் உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கியது.
இந்நிலையில், வெளிநாட்டுப் பயணத்தை நிறைவு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், இன்று அதிகாலை சென்னை திரும்புகிறார். இதையடுத்து எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவு: ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய பயணம், லண்டன் மாநகரில், அவர்கள் வாழ்த்தி வழியனுப்ப நிறைவுறுகிறது. அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன். இத்தனை நாளும் தங்கள் சகோதரனாய் என்னை கவனித்துக்கொண்ட புலம்பெயர் தமிழர்களுக்கு என் அன்பை நன்றியாய் நவில்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
8 நாட்கள் அயல்நாட்டு பயணங்களை நிறைவு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய நேரப்படி நேற்று பகல் 2.40 மணிக்கு (லண்டன் நேரம் காலை 10.10 மணி) எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், லண்டனில் இருந்து புறப்பட்டார். இந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இந்திய நேரப்படி நேற்று இரவு 9 மணி அளவில், துபாய் விமான நிலையம் வந்து சேர்ந்தது. அதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், துபாய் விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் தங்கும் ஓய்வறையில் சில மணி நேரம் ஓய்வு எடுத்தார். இதையடுத்து இன்று (திங்கட்கிழமை) இந்திய நேரப்படி, அதிகாலை 4 மணிக்கு, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், துபாயிலிருந்து அவர் சென்னைக்கு புறப்பட்டார். தொடர்ந்து அவர் இன்று காலை 8:05 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.
சென்னை பழைய விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக அரசு சார்பிலும், திமுகவினர் மற்றும் பொதுமக்கள் சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கிறார். அப்போது அவர் வெளிநாட்டு பயணம் குறித்தும், தமிழகத்திற்கு ஈர்க்கப்பட்டுள்ள முதலீடு குறித்தும், அதனால், எவ்வளவு பேருக்கு வேலை கிடைக்கும் என்பது தொடர்பாகவும் விளக்கமாக பதில் அளிக்க உள்ளார். பேட்டியை முடித்து கொண்டு அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு செல்கிறார். அவர் செல்லும் சாலையில் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.