பீகாரில் வாக்காளர் உரிமை யாத்திரை; ராகுல் பேரணியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: பொதுக்கூட்டத்திலும் உரையாற்றினார்
சென்னை: பீகாரில் நடைபெறும் வாக்காளர் உரிமை யாத்திரையில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானத்தில் பீகார் புறப்பட்டு சென்றார். அங்கு ராகுல்காந்தியுடன் பிரமாண்ட பேரணியில் அவர் கலந்து கொண்டு பொதுக்கூட்டத்திலும் உரையாற்றினார். காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது, கடந்தாண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா தேர்தல், 2023ல் நடந்த கர்நாடகா தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்களிலும் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு முறைகேடு செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். அதுமட்டுமல்ல, முறைகேடுகள் தொடர்பான தரவுகளை வெளியிட்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டானது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே, சட்டப் பேரவை தேர்தலை எதிர்நோக்கியுள்ள பீகாரில், திடீரென வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற முகாம்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இந்த சிறப்பு முகாமில் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவை குடியுரிமை ஆவணங்களாக ஏற்கப்படவில்லை. இதனால் 65 லட்சம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட இந்த நடவடிக்கை கடும் எதிர்ப்புக்குள்ளாகி இருக்கிறது. இந்த விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கின. உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. வாக்கள் நீக்கம் குறித்து கடுமையான எதிர்ப்பை பதிவு செய்த ராகுல் காந்தி, 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக தீவிர போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளார்.
தேர்தல் ஆணையம் மீது முக்கியமான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், வாக்காளர் பட்டியல் குளறுபடியைக் கண்டித்தும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்தும் ‘வாக்காளர் உரிமை யாத்திரை’ என்ற பெயரில் பீகாரில் ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 17ம்தேதி முதல் பேரணி நடத்தி வருகிறார். இந்த யாத்திரை பீகார் மாநிலம் முழுவதும் சுமார் 1,300 கி.மீ வரை என மொத்தம் 16 நாட்கள் நடத்தப்படவுள்ளது. இந்தப் பயணம் செப்டம்பா் 1ம்தேதி பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைய உள்ளது. நடைப்பயணமாகவும், வாகனப் பயணமாகவும் 16 நாட்கள் 1,300 கி.மீ. தொலைவைக் கடந்து 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகிறது. ராகுல் காந்தியின் இந்த யாத்திரையில் பல லட்சக்கணக்கான பொதுமக்கள் அலை அலையாக பங்கேற்று வருகின்றனர்.
இந்த நடைபயணத்தில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பீகாரில் நடைபெறும் நடைபயணத்தில் இன்று பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ராகுல்காந்தியின் வாக்காளர் உரிமை யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 7.35 மணியளவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலமாக பீகார் மாநிலத்தின் தர்பங்கா நகர விமானநிலையத்துக்கு புறப்பட்டு சென்றார். இந்த தனி விமானம் இன்று காலை 10 மணியளவில் தர்பங்கா நகர விமான நிலையத்தை சென்றடைந்தது. பின்னர் விமானநிலையத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் புறப்பட்டு, அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை என்.எச்-57ல் நடைபெறும் ராகுல்காந்தியின் பிரமாண்ட யாத்திரையில் பங்கேற்றார்.
அதை தொடர்ந்து, யாத்திரை முடிவடையும் இடத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். இதைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், தர்பங்கா விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 2 மணியளவில் தனி விமானத்தில் புறப்பட்டு சென்னைக்கு மாலை 4.30 மணியளவில் வந்து சேர்ந்தார். தனி விமானத்தில் முதல்வருடன், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி எம்பி, உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் உடன் சென்றனர். முன்னதாக, இன்று காலை சென்னை விமான நிலையத்துக்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, சா.மு.நாசர், கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்று வழியனுப்பி வைத்தனர்.
வாக்குதிருட்டு விவகாரம் நாடு முழுவதும் பூதாகரமாகியுள்ள நிலையில் இதனை சமாளிப்பது பாஜகவுக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பீகார் மாநிலத்தில் ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கு கொத்து கொத்தாக குவியும் பொதுமக்களின் கூட்டம் பாஜகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.