இந்தியாவின் வடகிழக்கு மூலையில், மேகங்கள் தவழ்ந்து விளையாடும் பசுமையான மலைகளின் மடியில், ஒரு மரகதக் கல்லைப் போலப் பதிந்திருக்கிறது மிசோரம். ‘‘மலைவாழ் மக்களின் தேசம்’’ என அழைக்கப்படும் இந்த மாநிலம், தனது செழுமையான பண்பாடு, அடர்ந்த காடுகள், பல்லுயிர் வளம் மற்றும் மக்களின் அன்பான உபசரிப்பால் தனித்து விளங்குகிறது. அதன் தலைநகரான ஆய்ஸ்வால், செங்குத்தான மலைகளின் உச்சியில் ஒரு கிரீடம் போல அமர்ந்து, இந்த அழகிய நிலப்பரப்பின் நுழைவாயிலாகத் திகழ்கிறது.விண்ணை நம்பிய வாழ்க்கை: மிசோரமின் பரப்பளவை சொல்ல வேண்டுமானால், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தை (சுமார் 7,194 சதுர கிலோமீட்டர்) விட, மிசோரம் மாநிலம் (21,081 சதுர கிலோமீட்டர்) கிட்டத்தட்ட 3 மடங்கு பெரியது. வளம் நிறைந்த மாநிலமாக இருந்தாலும், போக்குவரத்து வசதிகள் இல்லாததால் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. மாநிலத்திற்குள் பயணிக்க, ஆபத்தான, குறுகிய மலைச் சாலைகளே ஒரே வழியாக இருந்தன.
ஆனால், மாநிலத்தை விட்டு வெளி இடங்களுக்குச் செல்ல விரும்பும் சாமானிய மக்களுக்கு, அதிக கட்டணம் கொண்ட விமானப் பயணத்தைத் தவிர வேறு வழியே இல்லை என்ற நிலை நீடித்தது. கல்வி, மருத்துவம், வர்த்தகம் என அனைத்து அத்தியாவசியத் தேவைகளுக்கும் வெளி மாநிலங்களை நம்பியிருக்கும் மக்கள், இந்த விமானக் கட்டணங்களால் பெரும் நிதிச்சுமையைச் சந்தித்தனர். பொருளாதாரத் தேக்கம்: போக்குவரத்துச் சிரமங்களால், இங்கு விளையும் உலகத்தரம் வாய்ந்த அன்னாசி, இஞ்சி, மஞ்சள் மற்றும் ஆர்க்கிட் மலர்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. பல விளைபொருட்கள் சந்தையை அடையும் முன்பே வீணாகின. போக்குவரத்து வசதி இல்லாததால் தனிமைப்பட்டதை போல உள்ள மாநிலத்தின் தலைவிதியையே மாற்றியுள்ளது பைராபி-சாய்ராங் புதிய இருப்புப் பாதை திட்டம். மலைகளைப் பிளந்து இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பொறியியல் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
மொத்தம் 51.38 கி.மீ தூரத்துக்கு இந்த இருப்புப்பாதை அமைக்கப்படுகிறது. மொத்தம் ரூ.8000 கோடிக்கு மேல்செலவிடப்பட்டுள்ளது. பாதையின் மொத்த நீளத்தில் சுமார் 2.853 கிலோமீட்டர் தூரம், 48 வெவ்வேறு சுரங்கங்கள் வழியாகச் செல்கிறது. உறுதியான பாறைகளைக் குடைவது, எதிர்பாராத நிலத்தடி நீர் ஊற்றுகளைக் கையாள்வது என ஒவ்வொரு மீட்டரும் சவால் நிறைந்ததாகவே இருந்தது. பள்ளத்தாக்குகளை இணைக்க 55 பெரிய பாலங்கள், 87 சிறிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் 196ம் எண்ணுள்ள ஒரு பாலம் 114 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது டெல்லி குதுப்மினாரை விட 42 மீட்டர் உயரமானது என்பது குறிப்பிடத்தக்கது.
பைராபி-சாய்ராங் இடையேயான ரயில்பாதை தடத்தில் பயணிப்பது என்பது மிகச்சிறந்த அனுபவமாக அமையும். ஏனெனில், அடர்ந்த காடுகள், நதிகள், சுரங்கங்கள், பள்ளத்தாக்குகளை கடந்து செல்லும்போது பயண அனுபவம் சிறந்ததாக இருக்கும் என்றே கூறலாம். நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலக்கட்டம் மிசோரம் ரயில் பயணத்துக்கு சிறந்த காலமாக இருக்கும் எனவும், ஏப்ரல் முதல் அக்டோபர் வரை கடும் மழைக்காலம் எனவும் இந்த வழித்தடம் சுற்றுலா பயணிகள் வருகையையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
திட்டம் குறித்து தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி செந்தமிழ்ச்செல்வன் கூறுகையில், ‘‘இதற்கு முன்பு, அசாம் மாநில எல்லையில் உள்ள பைராபி வரை மட்டுமே ரயில் பாதை இருந்தது. அங்கிருந்து சாலை மார்க்கமாகத் தலைநகருக்கு வரச் சுமார் 12 மணி நேரம் ஆகும். இந்த புதிய பாதை, மக்களின் போக்குவரத்து, சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் சரக்குப் போக்குவரத்திற்குப் பெரிதும் உதவும்’’, என்றார். பைராபி-சாய்ராங் திட்ட தலைமை பொறியாளர் வினோத் குமார் கூறுகையில், ‘‘இந்தத் திட்டத்தில் உள்ள அனைத்துச் சுரங்கங்களிலும், ஜல்லிக்கற்கள் இல்லாத ரயில்பாதையாக அமைத்துள்ளோம். இதற்கு பராமரிப்பு தேவையில்லை. மேலும், சுரங்கங்களில் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இதில் 40 எண் சுரங்கப்பாதை 1.37 கிலோமீட்டர் நீளமுடையது. இதுவே இத்திட்டத்தின் மூன்றாவது மிக நீளமான சுரங்கமாகும். சுரங்கப்பாதையில் ஒவ்வொர 500 மீட்டருக்கும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன’’, என்றார். இந்த பாதையில் ரயில் சேவையை வரும் 13ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைக்கிறார் எனவும், இந்த வழித்தடத்தில் தினமும் 2 அல்லது 3 ரயில் சேவைகள் இருக்கும் எனவும் ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
தமிழக, ஐஐடி வல்லுநர்கள் பங்களிப்பு;
திட்டம் துவங்கியது முதல் இறுதி வரை ஐஐடி ரூர்கி வல்லுநர் குழு, இந்தியப் புவியியல் ஆய்வு அமைப்பின் (ஜிஎஸ்ஐ) வல்லுநர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். தமிழக தொழில்நுட்ப வல்லுநர்களும் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறினர். கட்டுமான பொருட்கள் கொள்முதல், சுரங்கப் பாதை அமைக்கும் பணி, தூண்கள் அமைக்கும் பணி என ஒவ்வொரு பணியும் தனித்தனியாக 30 நிறுவனங்கள் மூலம் செய்து முடிக்கப்பட்டுள்ளன. ரயில் பாதை வரைபடம் தயாரிக்கும் பணி, சிக்னல், தகவல் தொடர்பு பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்த தொழில் நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர்.
அடுத்த இலக்கு;
ரயில் பாதை மூலமான மிசோரமின் இந்த இணைப்பு, 2030க்குள் வடகிழக்கின் அனைத்து மாநிலத் தலைநகரங்களையும் தேசிய இருப்புப் பாதை அமைப்புடன் இணைக்கும் இலக்கின் முக்கிய மைல்கல்லாகும். அசாம், திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் தற்போது மிசோரம் ஆகிய மாநிலங்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், மணிப்பூர் (ஜிரிபாம்-இம்பால் திட்டம்), நாகாலாந்து (தன்சிரி-சுப்ஸா திட்டம்), சிக்கிம் (சிவோக்-ரங்போ திட்டம்), மற்றும் மேகாலயா (அஸ்ரா-பைர்னிஹாட் திட்டம்) ஆகிய மாநிலங்களையும் இணைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. பொருளாதார வளர்ச்சியைத் தாண்டி, நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவம் இதன் முக்கிய நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
* மிசோரத்தின் மூங்கில் பொருட்கள் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட சிறந்த வாய்ப்பு உருவாகும்.
* சுற்றுலாத் துறை சார்ந்த தங்கும் விடுதிகள், போக்குவரத்து, வழிகாட்டிகள் போன்ற சேவைகள் வளர்ச்சி பெறும்.