புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக இருந்த ரோஜர் பின்னி, நிர்ணயிக்கப்பட்ட வயதை கடந்ததால், சமீபத்தில் பதவி விலகினார். அதையடுத்து, புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், டெல்லி அணி முன்னாள் கேப்டன் மிதுன் மன்ஹாசை புதிய தலைவராக தேர்ந்தெடுக்க, புதுடெல்லியில் நேற்று முன்தினம் நடந்த பிசிசிஐ அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதையடுத்து, நேற்று, பிசிசிஐ தலைவர் பதவிக்காக, மிதுன் மனு தாக்கல் செய்தார். தவிர, முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ரகுராம் பட், பிசிசிஐ பொருளாளர் பதவிக்கும், தற்போதைய செயலாளர் தேவஜித் சைகியா, மேலும் ஒரு முறை அந்த பதவிக்கும் மனு தாக்கல் செய்துள்ளனர். பிசிசிஐ ஆண்டு பொதுக்குழு கூட்டம், வரும் 28ம் தேதி நடக்கவுள்ளது. மிதுன் மன்ஹாஸ், 157 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி, 9714 ரன்கள் எடுத்துள்ளார்.