Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

உருவக் கேலிக்கு நானும் தப்பவில்லை: நடிகையான முன்னாள் உலக அழகி வேதனை

புதுடெல்லி: உடல் எடை மற்றும் தோற்றம் குறித்து தான் சந்தித்த உருவக் கேலி விமர்சனங்கள் குறித்து முன்னாள் உலக அழகி மனுஷி சில்லர் மனம் திறந்து பேசியுள்ளார். முன்னாள் உலக அழகியும், நடிகையுமான மனுஷி சில்லர், சமீபத்தில் புதுடெல்லியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஒரு பிரபலமாக ஆன பிறகு தனது உடல் தோற்றம் குறித்து எதிர்கொண்ட உருவக் கேலி விமர்சனங்கள் பற்றி வேதனையுடன் பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசுகையில், ‘நானும், கடந்த 2021ம் ஆண்டின் உலக அழகி பட்டம் வென்ற ஹர்னாஸ் கவுர் சாந்துவும் கூட உடல் ரீதியான எதிர்மறை விமர்சனங்களில் இருந்து தப்ப முடியவில்லை. மருத்துவ மாணவியாக இருந்தபோது இதுபோன்ற விமர்சனங்கள் என்னை பெரிய அளவில் பாதிக்கவில்லை. ஆனால் 2017ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிறகு உடல் எடை, உருவ அமைப்பின் விமர்சனங்களின் தாக்கம் பல மடங்கு அதிகரித்து விட்டது. இந்த உருவக் கேலி விமர்சனங்களைச் சமாளிக்க வேண்டுமானால், வெளியில் இருந்து வரும் தேவையற்ற விமர்சனங்களை ஒருபோதும் நமது காதில் வாங்கிக் கொள்ளக் கூடாது.

நம் மீது அக்கறை கொண்ட வழிகாட்டிகளின் கருத்துக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மற்றவர்களின் விமர்சனங்கள் பெரும்பாலும் அவர்களின் பாதுகாப்பற்ற உணர்வின் வெளிப்பாடாகவே இருக்கும். எனவே, அதனைப் பொருட்படுத்தாமல், நம்மை நாமே நேசிப்பதும், நம்மைப் பார்த்துக் கொள்வதும் மிகவும் அவசியம்’ என்றார்.