Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

96500 03420க்கு மிஸ்டு கால் கொடுத்தும் ஆதரவு தெரிவிக்கலாம் ‘வாக்கு திருட்டு’க்கு எதிரான பிரசாரத்திற்கு புதிய வெப்சைட்: ராகுல் காந்தி அழைப்பு

புதுடெல்லி: வாக்கு திருட்டுக்கு எதிரான பிரசாரத்திற்கும், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டுமென்ற ராகுல் காந்தியின் கோரிக்கையையும் ஆதரித்து பொதுமக்கள் பதிவு செய்ய புதிய இணையதளத்தை காங்கிரஸ் தொடங்கி உள்ளது. 96500 03420க்கு மிஸ்டு கால் கொடுத்தும் ஆதரவு தெரிவிக்கலாம் பாஜ மற்றும் தேர்தல் ஆணையத்தின் கூட்டு முயற்சியால் தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடப்பதாகவும், நாடு முழுவதும் கோடிக்கணக்கான போலி வாக்காளர்கள் மூலம் வாக்கு திருட்டு நடப்பதாகவும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றம்சாட்டி உள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, கர்நாடகா மாநிலம் மத்திய பெங்களூருவின் மகாதேவபுரா சட்டப்பேரவை தொகுதியில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் இருப்பதை தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் ஆவணத்துடன் துல்லியமாக வெளியிட்டார். இந்த போலி வாக்காளர்கள் மூலம் தேர்தல்கள் சுதந்திரமாக நியாயமாக நடக்கவில்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் வாக்கு திருட்டுக்கு எதிரான பிரசாரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் votechori.in எனும் புதிய இணையதளத்தை காங்கிரஸ் தொடங்கி உள்ளது. இந்த இணையதளத்தில் வாக்கு திருட்டுக்கு எதிராக ராகுல் காந்தி வெளியிட்ட ஆதாரங்களின் முழு விவரங்களும் உள்ளன. அவற்றை பதிவிறக்கம் செய்து படிக்கலாம். தேர்தல் ஆணையம் டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டுமென்ற ராகுலின் கோரிக்கைக்கு votechori.in/ecdemand இல் ஆதரவு தெரிவித்து மக்கள் பதிவு செய்யலாம்.

இதில் பதிவு செய்வோருக்கு, ராகுலை ஆதரிப்பதற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த சான்றிதழில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், பொருளாளர் அஜய் மக்கான் ஆகியோரின் கையெழுத்துகள் இடம் பெற்றுள்ளன. இதில் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் பலரும் பதிவு செய்து சான்றிதழை பதிவிறக்கம் செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் வாக்கு திருட்டு நடப்பது குறித்து ஆதாரங்களும் பொதுமக்கள் தகவல் தெரிவிப்பதற்கான பிரிவும் இடம் பெற்றுள்ளது. மிஸ்டுகால் மூலமாகவும் ராகுலின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க 96500 03420 என்ற செல்போன் எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், ‘‘ஒரு நபருக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படை ஜனநாயகக் கொள்கை மீதான தாக்குதல் வாக்கு திருட்டு.

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கு சுத்தமான வாக்காளர் பட்டியல் அவசியம். எனவே தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையை காட்ட டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். இதன் மூலம் பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் வாக்காளர் பட்டியலை எளிதாக தணிக்கை செய்யலாம். இதற்காக பொதுமக்கள் அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம்’’ என கூறி உள்ளார்.