2025 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தான் மாணவி தேர்வு: தாய்லாந்து போட்டியில் பங்கேற்கிறார்
ஜெய்ப்பூர்: மிஸ் யூனிவர்ஸ் இந்தியா போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜீ ஸ்டுடியோவில் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இதில் நாடு முழுவதும் இருந்தும் அழகி போட்டிகளில் வென்றவர்கள் பங்கேற்றனர். நேற்று அதிகாலை நடந்த இறுதிப்போட்டியில் ராஜஸ்தானின் கங்காநகரைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா என்ற 22 வயது மாணவி மிஸ் இந்தியா யுனிவர்ஸ் 2025 ஆக முடிசூட்டப்பட்டார்.
மேலும் இந்த ஆண்டு நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெறும் 74வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் அவர் பங்கேற்க உள்ளார். நேற்று நடந்த இறுதிப்போட்டியில் வென்ற மணிகா விஸ்வகர்மாவுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியா ரியா சிங்கா கிரீடம் சூட்டினார். இந்த போட்டியில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தான்யா சர்மா(22) இரண்டாவது இடத்தையும், அரியானாவைச் சேர்ந்த மெஹக் திங்ரா(19) மூன்றாவது இடத்தையும், அரியானாவைச் சேர்ந்த அமிஷி கௌஷிக்(23) 4வது இடத்தையும், மணிப்பூரைச் சேர்ந்த சாரங்தெம் நிருபமா(24) 5வது இடத்தையும் பிடித்தனர்.
நடுவர் குழுவில் மிஸ் இந்தியா யுனிவர்ஸ் நிகழ்ச்சியின் நிகில் ஆனந்த், நடிகர் ஊர்வசி ரவுடேலா, ஆஷ்லே ரோபெல்லோ மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் பர்ஹாத் சம்ஜி ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 போட்டியில் மணிகா விஸ்வகர்மா இறுதியாண்டு அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதார மாணவி ஆவார். தற்போது அவர் படிப்புக்காக டெல்லியில் வசித்து வருகிறார்.