சென்னை: வக்ஃபு சட்டத்திருத்தம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வக்ஃபு திருத்தச் சட்டம் எனப்படும் சட்டம், இசுலாமியர்களின் மத உரிமைகளையும் சொத்து உரிமைகளையும் பறிக்கும் நோக்கத்துடனும், வக்பு வாரியத்தின் தனி அதிகாரத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடனும் ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது என்பது வெளிப்படையான உண்மை.
அரசியலமைப்பின் தந்தை அண்ணல் அம்பேத்கர் எச்சரித்ததுபோல், நாட்டிற்கும் மேலானதாக மதத்தை அரசியல் கட்சிகள் போற்றினால் நமது சுதந்திரம் இரண்டாவது முறையாக இன்னலுக்கு ஆட்பட நேரிடும் என்ற கருத்து இன்று நிஜமாக வெளிப்பட்டுள்ளது. CAA, NRC, UCC, மதரஸா சட்டம், Article 370 நீக்கம், பாபர் மசூதி இடிப்பு போன்ற அனைத்தும் ஒரே மதத்தினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களாகும். இவை இந்தியாவின் ஜனநாயக அடித்தளத்தையே சிதைக்கின்றன.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் வக்ஃபு திருத்தச் சட்டத்தில் பா.ஜ.க. அரசு கொண்டு வந்த சட்டவிரோதமான முக்கிய திருத்தங்களுக்கு தடை விதித்திருப்பது, மதச்சார்பின்மையும் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளும் இன்னும் உயிரோடுள்ளன என்பதை உறுதிப்படுத்தும் வரலாற்றுச் செயல் ஆகும். சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்க முயலும் பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன். மாண்பமை உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.