சிறுபான்மை மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயில ரூ.3.60 கோடி ஒதுக்கீடு: முதல்வருக்கு ஜவாஹிருல்லா பாராட்டு
சென்னை, செப்.6: சிறுபான்மை மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி பயிலும் திட்டத்திற்காக ரூ.3.60 கோடி ஒதுக்கியதற்காக முதல்வருக்கு ஜவாஹிருல்லா பாராட்டு தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: கடந்த ஏப்ரல் மாத பட்ஜெட் கூட்டத் தொடரில், சிறுபான்மை நலத்துறை அமைச்சர், சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பட்ட மேற்படிப்பு பயில கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தார். ஆனால் இத்திட்டத்திற்கான அரசாணை இன்று வரை வெளியிடப்படாத காரணத்தால் தமிழ்நாட்டில் பல சிறுபான்மை மாணவ, மாணவிகள் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பை பயில முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக கடந்த மாதம் 7ம் தேதி கடிதம் வாயிலாக முதல்வரின் கவனத்திற்கு நான் எடுத்துச் சென்றதின் அடிப்படையில் முஸ்லிம் சிறுபான்மை மாணவ மாணவியர் 10 பேர் வெளிநாடுகளுக்கு சென்று பட்டமேற்படிப்பு பயில கல்வி உதவித்தொகை ரூ.3.60 கோடி ஒதுக்கி அத்திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று விரைந்து அரசாணை வெளியிட உதவிய முதல்வருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.