*ஆணைய குழு உறுப்பினர் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் அறிவுறுத்தல்
அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு விரைந்து தீர்வுகாண வேண்டும் என்று எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சிறுபான்மையினர் சிறப்புக்குழு ஆய்வுக்கூட்டம் திருச்சி கிழக்கு எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தலைமையில், கலெக்டர் ரத்தினசாமி முன்னிலையில் நடைபெற்றது. இதில், அரியலூர் எம்எல்எ சின்னப்பா கலந்துகொண்டார்.
இக்கூட்டத்தில், சிறுபான்மையினர் ஆணைய சிறப்பு ஆய்வுக்குழு உறுப்பினர் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் சிறுபான்மையினர் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.
இத்திட்டங்கள் கடைகோடியில் உள்ள மக்களுக்கும் சென்று சேருகிறதா என்பது குறித்தும், அவற்றை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்திடும் வகையில் இவ்வாணையம் உருவாக்கப்பட்டுள்ளது.
பழைமை வாய்ந்த தேவாலயங்களிக் புனரமைப்பு பணிகளுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் அதற்கான நிதியினை ஒதுக்கி பல்வேறு மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அப்பணிகள் நடைபெறுவதையும் ஆய்வு செய்யவும் அறிவுறுத்தியுள்ளார். அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயின்று கல்லூரி படிப்பை தொடரும் மாணவர்களுக்கு மாதாந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததை தொடர்ந்து அவர்களும் உதவித் தொகையினை வழங்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து உதவித் தொகை மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்று வருகிறது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் மக்களுக்கான அரசின் நலத் திட்டங்கள் முறையாக கொண்டு சேர்க்கப்படுவது குறித்தும், கடந்த செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில், ஆணையத்தின் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது எண்ணிக்கை மற்றும் தீர்வு காணப்பட்டுள்ள மனுக்களின் விவரம் குறித்தும், தீர்வு காண வேண்டிய மனுக்கள் தொடர்பாகவும் தெரிவிக்கலாம்.
அதேபோன்று, மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற முகாம்களில் வழங்கிய மனுக்களின் விவரம், அதன் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள் தங்களது கோரிக்கையினை தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, சிறுபான்மையினர் மக்களின் கோரிக்கையினை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை வழங்கினார். மேலும், நிலுவையில் உள்ள கோரிக்கை மனுக்களின் மீது விரைவாக ஆய்வு மேற்கொண்டு தீர்வுகாண வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் ஆடுவளர்ப்பு, பால் வியாபாரம், பெட்டிக்கடை உள்ளிட்ட சுயதொழில் அமைப்பதற்கான உதவித்தொகைகளையும், மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் திட்டத்தின் கீழ் 47 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 5ஆயிரம் மதிப்பில் பிரியாணி கடை, டைலர் கடை, சூடம் போடுதல் பெட்டிக்கடை, சூடம்போடுதல் கடை வைப்பது உள்ளிட்ட சுயதொழில் அமைப்பதற்கான உதவித்தொகைகளையும், உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நலவாரியம் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு நலவாரிய அடையாள அட்டைகளும் என மொத்தம் 71 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (பொ) சுமதி, மாநில உபதேசியர்கள் நலவாரிய உறுப்பினர் ஜான்பிரகாஷ் எபிநேசர், இதர அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


