Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறுபான்மையினரை குறிவைக்கும் பாஜவின் புல்டோசர் நீதி முற்றிலும் ஏற்க முடியாதது: காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘மீண்டும் மீண்டும் சிறுபான்மையினரை குறிவைக்கும் புல்டோசர் நீதி முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது, அது நிறுத்தப்பட வேண்டும்’ என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. பாஜ ஆளும் மாநிலங்களில் குறிப்பிட்ட சமூகத்தினர் மீது குற்றச்சாட்டு எழும் போது அவர்களுக்கு சொந்தமான வீடு, கட்டிடங்கள் ஆக்கிரமிப்பு பகுதியில் அமைந்திருப்பதாக புல்டோசர் மூலம் இடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன.

இந்நிலையில், மத்திய பிரதேசம் சத்தர்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் கோட்வாலி காவல் நிலையத்தில் புகுந்த கும்பல் போலீசாரை தாக்கியது. இதைத் தொடர்ந்து, உள்ளூர் தலைவர் ஷாஜத் அலி என்பவரது வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று தனது எக்ஸ் தள பதிவில், ‘‘ஒருவரின் வீட்டை இடித்துவிட்டு, அவர்களது குடும்பத்தை வீடற்றவர்களாக ஆக்குவது மனிதாபிமானமற்றது மற்றும் அநீதியானது.

பாஜ ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினரை மீண்டும் மீண்டும் குறிவைப்பது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படும் சமூகத்தில் இதுபோன்ற செயல்களுக்கு இடமில்லை. அரசியல் சட்டத்தை அப்பட்டமாக புறக்கணிக்கும் பாஜ மாநில அரசுகளை காங்கிரஸ் கடுமையாக கண்டிக்கிறது. குற்றங்களுக்கு நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட வேண்டும், அரசின் வற்புறுத்தலால் அல்ல’’ என்றார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘ஒருவரது குற்றத்தையும் தண்டனையையும் நீதிமன்றம் மட்டுமே தீர்மானிக்க முடியும். ஆனால் குற்றம்சாட்டப்பட்ட உடனேயே, குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தை தண்டிப்பது, வீட்டை இடிப்பது போன்றவை சட்டத்தைப் பின்பற்றாத நீதிமன்றத்தை மதிக்காத செயல். இது நீதி இல்லை. காட்டுமிராண்டித்தனம் மற்றும் அநீதியின் உச்சம். புல்டோசர் நீதி என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, அது நிறுத்தப்பட வேண்டும்’’ என்றார்.

* வேலைவாய்ப்பு குறித்து மோடி கட்டுக்கதை

ஒன்றிய அரசு வேலைவாய்ப்பு குறித்து கட்டுக்கதைகளை கூறுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பதிவில்,‘‘ஒன்றிய அரசின் இளைஞர்களுக்கு எதிரான கொள்கைகளால் நாட்டில் வேலைவாய்ப்பு பற்றாக்குறை நிலவி வருகின்றது. பரோடா வங்கியின் சமீபத்திய அறிக்கையில் 2022-2023ம் ஆண்டில் மட்டும் 375 நிறுவனங்களில் 2.43லட்சம் வேலைகள் குறைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை கிடைக்காமல் சுற்றி வருகின்றனர்.

பீகாரில் காவலர்களுக்கான ஆட்சேர்ப்பு தேர்வு நடக்கிறது. 21,000 காலி பணியிடங்களுக்கு 18லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 60ஆயிரம் காவலர் பணியிடங்களுக்கு 26 மாநிலங்களை சேர்ந்த 6.30லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். வங்கிகள், நிதி, காப்பீடு, மருத்துவம் என அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. தவறான வழிமுறையை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட அறிக்கையை பிரதமர் மோடி வைத்துக்கொண்டு கோடிக்கணக்கான வேலைகளை வழங்குவதாக கட்டுக்கதைகளை கூறி வருகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.