Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறுபான்மையினர், பெண்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு பாஜகவும் அதன் கூட்டாளியான அதிமுகவும் வெற்றி பெற்றுவிடலாம் என கணக்கு போடுகிறார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

சென்னை: உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியல் திருத்தம் மூலமாக, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால் பாஜகவும் அதன் கூட்டாளியான அதிமுகவும் வெற்றிபெற்றுவிடலாம் எனக் கணக்கு போடுகிறார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

புயல் சின்னமும் பெருமழையும் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களை அச்சுறுத்துகிற நிலையில், வடகிழக்குப் பருவகால இயற்கையின் தன்மையை உணர்ந்து, சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. உங்களில் ஒருவனான நான் -உங்களால் முதல்வரான நான், எங்கெங்கு முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை நேரில் சென்று பார்வையிட்டு, உரிய நடவடிக்கைகளை நிறைவேற்றுமாறு அதிகாரிகளைப் பணித்திருக்கிறேன்.

தமிழ்நாட்டின் துணை முதல்வரில் தொடங்கி, அத்தனை அமைச்சர்களும் களத்தில் மக்களுக்கு உறுதுணையாக நிற்கிறார்கள். திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தோழமை இயக்கத்தினர் என அனைவரும் முழு வீச்சுடன் செயலாற்றி வருகிறார்கள். வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்ப்பது, பாதிப்புகள் ஏற்படும் இடங்களில் நிவாரணப்பணிகளை விரைந்து மேற்கொள்வது, நெல் சாகுபடி -கொள்முதல் ஆகியவை தடையின்றி நடைபெறுவது உள்ளிட்ட அனைத்திலும் நம் திராவிட மாடல் அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.

இயற்கைப் பேரிடர் சூழல்களில் எதிர்க்கட்சியினரும் களமிறங்கி மக்கள் நலப் பணிகளை ஆற்றுவதுதான் நல்ல ஜனநாயகத்திற்கான அடையாளம். ஆனால், இப்போதுள்ள எதிர்க்கட்சி தலைவர், பருவமழைக் காலத்திலும் அரசியல் களத்தில் ஏதாவது அறுவடை செய்ய முடியுமா என்று தான் செயல்படுகிறாரே தவிர, ஆக்கப்பூர்வமாகவோ மக்களுக்கு உறுதுணையாக உண்மையாகவோ எதையும் செய்யும் எண்ணமில்லாமல் இருக்கிறார். நெல் மூட்டைகள் கொள்முதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும் அவரது கட்சியினரும் சொன்னவையெல்லாம் புளுகு மூட்டைகள்தான் என்பதை திராவிட மாடல் அரசின் தொடர் செயல்பாடுகள் நிரூபித்துவிட்டன. பொய்களையும் அவதூறுகளையும் புறந்தள்ளி, நாம் தொடர்ந்து மக்களுக்காகப் பணியாற்றிக் கொண்டே இருப்போம்.

அத்துடன், ஜனநாயகம் வழங்கியுள்ள மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையைப் பாதுகாக்க வேண்டிய பெருங்கடமையும் பொறுப்பும் திமுகவிற்கு உள்ளது. S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தைத் தமிழ்நாட்டில் அடுத்த வாரத்தில் நடைமுறைப்படுத்தப் போவதாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கின்ற பீகார் மாநிலத்தில் ஏறத்தாழ 65 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாக்குரிமையை இதே சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் தேர்தல் ஆணையம் பறித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டிலும் அதே குறுக்குவழியைப் பின்பற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது கைப்பாவையாகத் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்த முயற்சிக்கிறது என்பதை திமுகவும் இந்தியா கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.

உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை S.I.R. மூலமாக, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால் பாஜகவும் அதன் கூட்டாளியான அதிமுகவும் வெற்றிபெற்றுவிடலாம் எனக் கணக்கு போடுகிறார்கள். அதாவது, நேரடியாகத் தேர்தல் களத்தில் மக்களைச் சந்திக்கும் வலிமையில்லாதவர்கள், மக்களின் வாக்குரிமையைப் பறித்துவிட்டு வெற்றி பெறலாம் எனப் போடுகின்ற கணக்கு என்பது, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தப்புக்கணக்காகத்தான் ஆகும்.

S.I.R. முறையைக் கைவிடவேண்டும் என்பதையும், வாக்காளர் பட்டியலைச் சீர்ப்படுத்த வேண்டுமென்றால் அதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி, கால அவகாசத்தை வழங்கவேண்டும் என்பதையும் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளது திமுக கழகம். அதையும் மீறி எடுக்கப்படும் ஜனநாயக விரோத செயல்பாடுகளைச் சட்டரீதியாக எதிர்கொள்வதுடன், மக்களுடன் நின்று களத்திலும் எதிர்கொள்ளும் வலிமை திமுகவிற்கு உண்டு.

‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பின் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்த இயக்கம் தான் திமுக. நான்காண்டு கால திராவிட மாடல் அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீட்டிலும் எடுத்துச் சொல்லி, திமுக அரசின் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் என்னென்ன பயன்களைப் பெற்றுள்ளன என்பதை உறுதி செய்து, தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் துரோகத்தையும் மீறி - மாநில அரசின் திட்டங்களைத் திறம்பட நிறைவேற்றி - தமிழ்நாடு தலைகுனியாது என்பதை நிலைநாட்டி, மாநில உரிமைகளுக்காகப் போராடும் தி.மு.க. அரசு தொடர்ந்திட- மக்களின் ஆதரவைப் பெற்று, இரண்டரை கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் இணைத்தவர்கள் திமுகவின் ரத்தநாளங்களான உடன்பிறப்புகள்.

அதற்காக என் மனமார்ந்த நன்றியை அப்போதும் தெரிவித்தேன். இப்போது மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். களத்தில் நமக்கான பணிகள் முடிவடையவில்லை. இன்னும் நிறைய இருக்கிறது. என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், அவற்றை எப்படி மேற்கொள்ள வேண்டும், திமுக தலைமை முதல் கடைக்கோடியில் உள்ள தொண்டர் வரை அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவது எப்படி என்பது உள்ளிட்ட அனைத்தையும் விவாதித்து, அவற்றைக் களத்தில் செயல்படுத்துவதற்காக, 28ம் தேதி(நாளை மறுநாள்) காலையில் மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கான்ஃப்ளூயன்ஸ் அரங்கில் பயிற்சிக் கூட்டம் நடத்தப்படவிருக்கிறது.

‘என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி‘ என்ற இலக்குடன் திமுகவினர் களப்பணியாற்றுவதற்கான இந்தப் பயிற்சிக் கூட்டம், உங்களில் ஒருவனான எனது தலைமையில் நடைபெறுகிறது. பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் ஆகியோர் முன்னிலை வகிக்கும் இந்தப் பயிற்சிக் கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள், திமுகவின் நாடாளுமன்ற மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாநகர ஒன்றிய நகர பகுதி -பேரூர்க் கழகச் செயலாளர்கள் பங்கேற்றுப் பயிற்சி பெற இருக்கிறார்கள்.

இந்தப் பயிற்சிக்கூட்டத்திற்குப் பிறகு ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பாக முகவர்கள், பாக உறுப்பினர்கள் குழு, பாக டிஜிட்டல் ஏஜென்ட், பாக இளைஞரணி, பாக மகளிரணி, பாகத்திற்குட்பட்ட கிளை, வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து ‘என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி’ என்பதை முன்னெடுக்க வேண்டும். மாநில நிர்வாகியாக இருந்தாலும் கூட அவரவர் வாக்குச்சாவடியில் வெற்றி பெற வேண்டும் என்பதே இலக்காக இருக்க வேண்டும். மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் S.I.R. செயல்பாட்டில் கண்காணிப்பாக இருந்து திமுகவினர் கடமையாற்ற வேண்டும். எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தனது சொந்தக் கட்சியின் உரிமைகளையே பாஜகவிடம் அடகு வைத்துவிட்ட நிலையில், மக்களின் உரிமைகளைப் பற்றிக் கவலைப்பட அதற்கு நேரமிருக்காது.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மக்களின் உரிமைகளைக் காக்க வேண்டியவர்கள் திமுகவினரும் தோழமைக் கட்சியினரும்தான். என்னுடைய வாக்குச்சாவடியில் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்வேன் என ஒவ்வொரு திமுகவினரும், உறுதியேற்று, களப்பணியாற்றினால், எல்லா வாக்குச்சாவடிகளிலும் முன்னிலை பெற்று, 2026ல் ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைவது உறுதியாகிவிடும். மக்கள் நலனையும் மாநில உரிமைகளையும் காக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் தமிழ்நாடு தலைகுனியாது. தலைகுனிய விடமாட்டார்கள் திமுகவினர். அந்த நம்பிக்கையுடனும் உறுதியுடனும்தான் மாமல்லபுரத்தில் நடைபெறும் பயிற்சிக் கூட்டத்தில் உங்களைச் சந்திக்க வருகிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.