சிறுமி பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை; சிறையில் உயிரற்ற நிலையில் இருக்கும் கைதி சாமியாருக்கு 6 மாத ஜாமீன்: ராஜஸ்தான் ஐகோர்ட் அதிரடி
ஜெய்ப்பூர்: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சாமியார் ஆசராமுக்கு, அவரது மோசமான உடல்நிலையைக் காரணம் காட்டி ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் 6 மாத கால இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே ெசயல்பட்டு வந்த ஆசிரமத்தில், கடந்த 2013ம் ஆண்டு 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசராம் கடந்த 2013ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மகன் நாராயண் சாயும் மற்றொரு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். ஆசராம் தனது ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் இதற்கு முன்பு பலமுறை நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆசராம் தரப்பில் அவரது மோசமான உடல்நிலையைக் காரணம் காட்டி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சர்மா மற்றும் நீதிபதி சங்கீதா சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆயுர்வேத மருத்துவமனை வழங்கிய மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், 86 வயதான ஆசராம், ‘தசை வலுவிழப்பு, தொடர்ச்சியான இரைப்பைக் குடல் ரத்தப்போக்கு மற்றும் மலம், சிறுநீர் கழிப்பதில் கட்டுப்பாடின்மை’ போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு, அவரது ‘உடல்நிலை கிட்டத்தட்ட உயிரற்ற நிலைக்கு ஒப்பான நிலையில்’ இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைப் பரிசீலித்த நீதிபதிகள், ‘குற்றவாளிகள் உட்பட அனைத்து தனிநபர்களுக்கும் போதுமான மருத்துவ சிகிச்சை பெறுவது அடிப்படை உரிமை’ என்றும், சிறையில் அவருக்குத் தேவையான சிறப்பு மருத்துவ வசதிகள் இல்லை என்றும் குறிப்பிட்டனர். இதையடுத்து, அவருக்கு 6 மாத கால இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், ரூ.1,00,000 சொந்த ஜாமீனும், தலா ரூ.50,000 மதிப்புள்ள இரண்டு நபர் ஜாமீனும் செலுத்த வேண்டும், தனது ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூடாது, ஆறு மாதங்கள் முடிந்ததும் விரிவான மருத்துவ அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
