சென்னை: போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் 11வது மாநில சாலை பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடந்தது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: சென்னை தலைமை செயலகத்தில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் 11வது மாநில சாலை பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கடந்த ஆண்டு 2024 நவம்பர் 4ம் தேதி நடந்த பத்தாவது மாநில சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் அதன் மீது எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும், வருங்கால செயல் திட்டம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், தலைமை செயலாளர் முருகானந்தம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயலாளர் தீரஜ் குமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் அமுதா, போக்குவரத்து மற்றும் சாலைப்பாதுகாப்பு ஆணையர் கஜலட்சுமி, காவல், மக்கள் நல்வாழ்வு, போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.