அமைச்சர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற கங்கைகொண்ட சோழபுரம் மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்த நாள் ஆடி திருவாதிரை விழா!
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், சுற்றுலாத்துறை, இந்துசமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிருவாகம் சார்பில் மாமன்னன் இராஜேந்திரசோழன் பிறந்த நாள் ஆடி திருவாதிரை விழாவினை நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு , தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் , போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் துவக்கி வைத்து விழாப் பேருரையாற்றினார்கள்.
இவ்விழாவில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல்.திருமாவளவன் சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர்.க.மணிவாசன், , கலைப் பண்பாட்டுத் துறை இயக்குநர் கவிதா ராமு, , இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், , சுற்றுலாத் துறை இயக்குநர் கிறிஸ்துராஜ், , மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, , ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கா.சொ.க.கண்ணன் , அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வாஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி, இ.கா.ப ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்த நாள் ஆடிதிருவாதிரை விழாவை துவக்கி வைத்து நிதி மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பேசியதாவது:
திருவாதிரையில் ஜெகத்வித்தவனாக பிறந்திருக்கக் கூடிய மாமன்னன் ராஜேந்திரனுக்கு அவன் புகழை போற்றக்கூடிய வகையில் அவன் பிறந்தநாளுக்கு எப்படி தன் தந்தை ராஜ ராஜன் பிறந்த ஐப்பசி சதயம் சதயத்திருநாளாக என் அய்யன் பிறந்தநாள் சதய திருநாளாக நான் நடத்துகிறேன் என்று ராஜேந்திரன் கல்வெட்டுலே தன்னுடைய தந்தை ராஜராஜன் பிறந்த ஐப்பசி சதயத்தை அவன் இருந்து அந்த நாளை நடத்தினேன் என்று கல்வெட்டுகளிலே என் அய்யன் என்று அவன் குறிப்பிட்டானோ அதை போல அவன் மைந்தன் ராஜேந்திரன் பிறந்த அந்த ஆடி திருவாதிரை திருநாளை அரசினுடைய விழாவாக நான் இருந்து நடத்துகிறேன் என்று அதை அறிவித்து நடத்தக்க கூடியவர் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் ஆவார்.
பொன்னேரி என்று அழைக்கக்கூடிய சோழகங்கம் ஏரியை வெட்டுவித்து வைத்து அதை சிறப்பு செய்யக்கூடிய வகையில் தான் வென்ற கங்கை நதி புறத்தில் இருந்து கங்கை நீரை கொண்டு வந்து கங்கை நீரை அதனில் வார்த்து அதில் சோழகங்கம் என்கின்ற பெயரை உருவாக்கினானோ, அதைப்போல இன்றைக்கு அந்த ஏரியினுடைய புனரமைப்புகாக அந்த ஏரியினுடைய மேம்பாட்டிற்காக சுற்றுலா மேம்பாட்டுக்காக விவசாய பெருங்குடி மக்களினுடைய நலனுக்காக ஏறத்தாழ 19 கோடியே 25 இலட்சம் ரூபாய் அதற்காக நிதியினை ஒதுக்கி அறிவித்ததற்கு விவசாய பெருங்குடி மக்கள் கங்கைகொண்ட சோழபுரத்து மக்கள் சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய ஏறத்தாழ 537 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பால்வார்த்த பெருமையை தந்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கங்கைகொண்ட சோழபுரம் மிகச் சிறப்பு வாய்ந்த ஒரு நகரம். கங்கைகொண்ட சோழபுரம் என்பது வெறும் பெயர்ச்சொல் அல்ல அது ஒரு வினைச்செயலினுடைய முடிவு. அந்த வினை என்பது அவன் தேர்ந்தெடுத்து வென்று இருக்கக்கூடிய நாடுகளில் வெற்றி பெற்று வெற்றிமுரசம் கொட்டி இந்த ஊருக்கு திரும்பி வந்தானோ அந்த வினையினுடைய திட்பமும், அந்த வினையினுடைய முடிவும் தான் கங்கைகொண்ட சோழபுரம். கங்கைகொண்ட சோழபுரம் ஒன்றுதான் தலைநகரங்களில் ஒரு வெற்றித் தலைநகரம் என்கின்ற அந்த பெருமையை பெற்ற ஒரு ஊராகும். இராஜேந்திர சோழன் தனது தந்தையை மிஞ்சிய தனயனாக தான் இருந்து விடக்கூடாது என்ற முடிவை எடுத்திருந்தாலும் தஞ்சையை மிஞ்சிய தலைநகராக கங்கைகொண்ட சோழபுரம் வரவேண்டும் என்பதில் அவன் உறுதியாக இருந்தான். தஞ்சையை விட கங்கைகொண்ட சோழபுரம் என்கின்ற இந்த ஊரை தலைநகராக உயர்த்துவதற்கும் எடுத்த முயற்சிகளை பெருமையோடு சொல்ல வேண்டும் எனில் வடக்கே கங்கை நதியில் இருந்து தெற்கே ஈழம்வரை, மேற்கே இன்றைக்கு கொடுங்கலூர், முசிறி பட்டணம் என்று அழைக்கக்கூடிய பகுதிவரை, கிழக்கே கடாரம் வரை பெரிய பூபாகத்தை ஒரு புள்ளியிலிருந்து, ஒரு தலை நகரத்திலிருந்து ஆட்சி செய்த பெருமை ராஜேந்திரனுக்கும் அவனுக்கு பின்னாலே வந்த ராஜாதி ராஜனுக்கும், அவனுக்கு பின்னால் வந்த குலோத்துங்கனுக்கும் தொடர்ச்சியாக இருந்தது.
ராஜேந்திர சோழ தேவர் என்று அழைக்க கூடிய அளவிற்கு மிக அற்புதமான வெற்றியை அத்தனை திசைகளிலும் பெற்றிருக்கிறார் என்றால் அதனுடைய மைய புள்ளி கங்கைகொண்ட சோழபுரம் என்கின்ற இந்த மகத்தான மண்ணிலே இருக்கிறது. அவனுடைய திருமகனங்களில் ஒருவனாக இருந்து கல்யாணபுரத்திலும் கொல்லாபுரத்திலும் போர்க்களத்திலேயே ஒரு மாமன்னன் முடி சூட்டிக்கொண்டான் என்ற புகழை பெற்ற ராஜேந்திர சோழனுடைய மகன் வீரராஜேந்திரன் அவனுடைய கல்வெட்டு தான் இங்கே முதல் கல்வெட்டாக இருக்க முடியும். 2021 ஆம் ஆண்டு முதல் ஆடி திருவாதிரை விழா அவன் பிறந்த நாள் தான் நாம் கொண்டாட வேண்டிய திருநாள் என்று அதை அரசு விழாவாக அறிவித்த பெருமை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சேரும்.
குடவாயில் பாலசுப்பிரமணியம் தான் நீண்ட ஆய்வுக்கு பிறகு திருவாரூர் கல்வெட்டைப் படித்துவிட்டு மிகச் சரியாகச் சொன்னார் ராஜேந்திரன் பிறந்தது மார்கழித் திருவாதிரை அல்ல அது ஆடி திருவாதிரை என்று ஆடி திருவாரூரில் பிறந்த நட்சத்திரத்தை வைத்து இந்த நாளை கொண்டாட வேண்டும் என்ற அந்த சரியான கால கணக்கீட்டை உருவாக்கித் தந்தார். சுமார் 5000 வருடங்களுக்கு முன்பாகவே இரும்பின் பயன்பாட்டை கண்டறிந்த ஒரு இனம் இருக்கிறது என்று சொன்னால் அது தமிழ் இனம் என்பதை நாம் பெருமையாக சொல்ல முடியும் எனவே தமிழனுடைய வரலாற்று பெருமைகளை உருவாக்கக் கூடிய வகையில் இங்கே அகழாய்வுகளை நம்முடைய முதலமைச்சர் நடத்துவதற்கு உத்தரவிட்டார்.
மேலும், அகழாய்வு பணிகளில் கிடைக்கப்பெற்றுள்ள பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் 22 கோடி நிதி ஓதுக்கீடு செய்துள்ளார்கள். சோழகங்கம் ஏரியினுடைய மேம்பாட்டுக்காக 12 கோடி ரூபாய் என்று இவ்வளவு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழருடைய நாகரீகத்தை பெருமையை தூக்கி பிடிக்க கூடிய வகையில் மாமன்னன் ராஜேந்திரன் உருவாக்கி தந்திருக்கக்கூடிய இந்த வெற்றியினுடைய பெருமையும் தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் மட்டுமல்ல உலகமெங்கும் பரவி ராஜேந்திரனுடைய ஆட்சியும் பெருமையும் நமக்கெல்லாம் பாடமாக இருக்க வேண்டும் என நிதி மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் பேசியதாவது:
முத்தமிழிறஞர் கலைஞர் அய்யா வரலாற்றுகளை எல்லாம் பாதுகாக்க வேண்டும் அதுவும் குறிப்பாக தமிழ் மன்னர்களுடைய வாழ்க்கை வரலாறுகளை எல்லாம் பாதுகாக்க வேண்டும். அதேபோன்று இந்த நாட்டினுடைய சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை பற்றி அவர்களது வாழ்க்கை வரலாறுகளையும் பாதுகாக்க வேண்டும் அவர்களுக்கு மரியாதை செய்யவேண்டும். அதேபோன்று தமிழ்மொழிக்கு பாதிப்பு ஏற்படுகின்ற போது அதை பாதுகாக்க பாடுபட்ட உயிர்நீத்த தியாகிகளுக்கெல்லாம் மரியாதை செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அதுபோல தமிழ்நாடு முதலமைச்சர் இராஜேந்திர சோழன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தார்கள்.
2010 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அய்யா முதலமைச்சராக இருந்தபோது தஞ்சையில் பெருங்கோவிலை அமைத்த ஆயிரமாவது ஆண்டினை முன்னிட்டு அதனை அமைத்த இராஜஇராஜ சோழனுக்கு மரியாதை செய்கின்ற வகையில் விழா எடுத்தார்கள் அதேபோல மாமன்னன் இராஜேந்திர சோழனுடைய பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்து இப்பகுதியினுடைய மேம்பாட்டிற்கு அருங்காட்சியகம் போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, ஒவ்வொரு துறைகளின் சார்பில் பணிகள் எல்லாம் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.
அதேபோன்று கலை பண்பாட்டு மற்றும் அருங்காட்சியகங்கள் சார்பில் தஞ்சையில் சோழ அருங்காட்சியகம் என ஏறத்தாழ 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். அதில் இராஜஇராஜ சோழனுக்கு 35 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படவுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன்.
அவ்வாறு பரம்பரையாக நமது மண்ணை ஆண்ட, நமது மண்ணுக்கு பெருமை சேர்த்த சோழக்குடும்பத்தை சார்ந்த இராஜஇராஜ சோழன், இராஜேந்திரசோழன் ஆகியோருக்கு பெருமை சேர்க்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சி முத்தமிழறிஞர் அய்யா கலைஞர் அவர்களின் வழியில் நடைபெற்று கொண்டிருக்கிறது. நம்முடைய கலை, பண்பாட்டு கலாச்சாரங்களை பாதுகாக்கின்ற வகையில் இப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்வார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பதை சொல்லி, அதற்கு நீங்கள் அனைவரும் உதவியாக இருக்க வேண்டும். இத்தகைய சிறப்பான நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்பை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சர் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் நாயகர் இராசராச சோழனின் மைந்தன் இராஜேந்திரன் சோழனுக்கு பிறந்த நாள் விழா எடுக்கவேண்டும். நீங்கள் அனைவரும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என ஆணையிட்டு எங்களுக்கு அரியதொரு வாய்ப்பினை வழங்கியிருக்கிறார்கள். மாமன்னன் இராஜேந்திர சோழன் மாபெரும் வீரன் என்பதை நாம் வரலாற்று ஏடுகளில் காணுகிறோம். மாமன்னன் இராஜேந்திர சோழன் வடக்கே கங்கை வரையிலும், தெற்கே இலங்கை வரையிலும், மேற்கே மேலை கடற்கரை, கிழக்கே சும்தரா, நிக்கோபார் தீவுகள் வரை புலிக்கொடியை பறக்கவிட்ட மாபெரும் மன்னன். கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றிப்பெற்று கங்கைகொண்ட சோழபுரம் என்ற இந்த நகரை உருவாக்கி, கங்கை நீரை இங்கு எடுத்து வந்து சோழகங்கம் ஏரியில் அதனை நிரப்பியதுடன், இம்மாபெரும் கோவிலையும் எழுப்பி மிகப்பெரிய வரலாறு படைத்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் இப்பகுதியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அருங்காட்சியகத்திற்கு நிதி, நீர்வளத்துறைக்கு நிதி என்று இப்பகுதியினை வளம்பெற செய்யும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள். இந்த அறிவிப்புகள் நமக்கெல்லாம் மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது. சுற்றுலாத்துறையில் அறிவிப்பில் தகவல் தொடர்பு மையம், சிறுவர் விளையாட்டு மையம், நடைபாதை, சுற்றுச்சுவர், வழிகாட்டு பலகை, கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு அறை, மின்வசதி, கழிப்பிட வசிதகள், பசுமை பரப்பை உருவாக்குதல் போன்றவற்றிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து நிரம்ப நிதியினை வழங்கியுள்ளார்கள்.
மாமன்னன் இராஜேந்திர சோழன் உருவாக்கியதை பாதுகாக்கும் பொருட்டு நம்முடைய கங்கைகொண்ட சோழபுரத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள அறிவிப்புகள் இப்பகுதி மக்களுக்கு மனநிறைவை தருவதாக அமைந்துள்ளது. மாண்புமி தமிழ்நாடு முதலமைச்சர் சட்ட பேரவையில் செய்த அறிவிப்பில் யுனெஸ்கோவின் உலக பராம்பரிய தளமான கங்கைகொண்ட சோழபுரத்தில் ரூபாய் 5 கோடி செலவில் நுழைவு வாயில், வாகன நிறுத்துமிடம், மின் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.
மாமன்னன் இராஜேந்திர சோழனுக்கு கங்கைகொண்ட சோழன், மும்முடிசோழன், உத்தமசோழன், பண்டித சோழன், கடாரங்கொண்டான் என புகழப்பட்டுள்ளார். மேலும், கலையும், கல்வியையும் வளர்த்திருக்கிறார், மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்த நாள் ஆடி திருவாதிரை விழாவினை எழுச்சியோடும், ஏற்றத்தோடும் வரலாற்றை நினைவுக்கூறும் வகையில் நடத்திட ஆணையிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் பேசியதாவது:
மாமன்னன் இராஜேந்திர சோழனுடைய பெருமை அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் அளித்த அங்கீகாரம் தான் இன்றைக்கு கங்கைகொண்ட சோழபுரத்தை மீண்டும் உயிர்ப்பிக்க செய்திருக்கிறது. இந்த விழாவை அரசு விழாவாக நடத்துவதற்கு அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக இவ்விழா நடைபெற்று இவ்விழாவின் போதெல்லாம் புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட வெளியிட இந்த மண் பெருமைப்பட்டு வருகிறது. இங்கே ஒரு அருங்காட்சியகத்தை அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டு அதற்கு பணிகளை நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் துவக்கி வைத்துள்ளார்கள்.
தற்போது மகத்தான பரிசை இந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்கள். சோழகங்கம் ஏரி பொன்னேரியை தூர் வாருவதற்கும், வரத்து வாய்க்கால்களை தூர் வார்வதற்கு ரூபாய் 35 கோடி நிதி ஒதுக்கியிருப்பது இந்தப் பகுதி சேர்ந்த விவசாய பெருங்குடி மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைய இருக்கிறது. இப்பகுதியினுடைய நீர் ஆதாரம் உயர்ந்து, மீண்டும் இப்பகுதி மக்கள் சிறப்பாக விவசாயம் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். அதேபோன்று சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்காக ரூபாய் 7 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது இப்பகுதிக்கு இன்னும் அதிகமான பொதுமக்கள் வருகை தருவதற்கு வாய்ப்பாக அமையும். ஒரு சிறிய கிராம பகுதியாக மாறிய கங்கைகொண்ட சோழபுரத்தை மீண்டும் ஒரு பெருநகரமாக மாற்றிட அனைத்து வகையான அடித்தளங்களையும் ஏற்படுத்தியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் இந்த மண்ணின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்த நாளை ஏன் கொண்டாட வேண்டுமென்றால் பல்வேறு காரணங்கள் உள்ளது. இராஜஇராஜ சோழனுக்கு தலைநகராக இருந்து தஞ்சை விடுத்து காடாக இருந்த காடுவெட்டி அழைக்கப்படுகின்ற பகுதியை திருத்தி, வறண்டு கிடந்த பிரதேசத்தை பெருமக்கள் வாழ்கின்ற பகுதியாக மாற்றியிருக்கிறார் என்றால் அது இராஜஇராஜ சோழனுயை ஆட்சிப்பெருமைதான். இங்கே ஆரம்பிக்கப்பட்டு அரியலூர், பெரம்பலூர் வரை பல்வேறு கிராமங்கள், நகரங்கள் இருக்கிறது என்றால் அது மாமன்னன் இராஜேந்திர சோழன் காலத்தில் அமைக்கப்பட்ட கிராமங்கள் தான். மாமன்னன் இராஜேந்திர சோழன் வடிவமைத்த இப்பகுதியில் வாழுகின்ற சிறப்பை நாம் பெற்றுள்ளோம். கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்றதன் அடையாளம் தான் கங்கைகொண்ட சோழபுரம், மலேசியாவில் இருக்கின்ற கடாரம் வரை சென்று வெற்றிப்பெற்றதன் அடையாளம்தான் கடாரம்கொண்டான் என்ற ஊராகும். இவ்வாறு இங்குள்ள ஒவ்வொரு கிராமங்களும் அவருடைய வெற்றியை ஆட்சியின் சிறப்பை எடுத்துரைப்பதாக இருக்கிறது.
மாமன்னன் இராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம் கோவில் அமைத்தபோது தனது தந்தை இராஜஇராஜசோழன் தஞ்சையில் அமைத்த பெரிய கோவிலின் கோபுரத்தை விட உயரம் குறைவான கோபுரத்தை கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் அமைத்து தனது தந்தையை மிஞ்சாத மகனாக இருந்தார். அதேபோன்று தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் அவர்களின் வழியில் செயல்பட்டு வருகிறார் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசினார்.
மதிப்பிற்குரிய சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதாவது:
மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்த நாளை கொண்டாடுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். நாமெல்லாம் இந்த மண்ணின் மைந்தர்கள் என்பது பெருமை அளிக்கிறது. சோழகங்கம் என்ற மாபெரும் ஏரியை வெட்டிய மாமன்னன் இராஜேந்திர சோழன் நடமாடிய மண்ணை சேர்ந்தவர்கள் நாம் என்பது நமக்கு பெருமை அளிக்கிறது. இந்த பகுதியில் பிறந்த மாமன்னன் இராஜேந்திர சோழன், இராஜஇராஜ சோழனின் மகன் மதுராந்தகன் என்ற இயற்பெயர் கொண்டவர். தமிழ்நாடு எல்லைய தாண்டி, சோழநாட என்கிற எல்லையை தாண்டி வடக்கே ஒரிசா வரையில் தெற்காசிய பகுதி முழுவதும் படை நடத்தி சென்று வென்று சாதித்து காட்டியவர் மாமன்னன் இராஜேந்திர சோழன் என வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். கங்கை கொண்டான் என்றால் கங்கை வரை சென்று வெற்றி பெற்றவன். கடாரம் கொண்டான் என்றால் கடாரம் வரை சென்று வெற்றி பெற்றவன் என்ற பெருமைக்குரியவர் மாமன்னன் இராஜேந்திர சோழன் ஆவார் என சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல்.திருமாவளவன் பேசினார்.
முன்னதாக மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்த நாள் ஆடி திருவாதிரை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு பெருவுடையார் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்டனர். அதனைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆடி திருவாதிரை விழா தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் பெருமக்கள் வழங்கினார்கள். முன்னதாக மாமன்னன் இராஜேந்திர சோழன் வரலாற்று சிறப்புகள் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, யாழிசை, தென்னாட்டு பெருவேந்தன் நாட்டிய நாடகம், மாபெரும் கிராமிய இசை, நடன நிகழ்ச்சி (பறை, கரகம், துடும்பாட்டம்), முனைவர்.பர்வீன் சுல்தானா அவர்களின் தலைமையில் பட்டிமன்றம் - சோழர்கள் புகழுக்கு பெரிதும் காரணம் நிருவாகத் திறனே! போர் வெற்றிகளே!, பல்சுவை நிகழ்ச்சிகள், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், மக்களிசை பாடல்கள், மாமன்னன் இராஜேந்திரசோழன் நாடகம், மயில்காவடி, கிராமிய பாடல்கள், பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் மாலை வரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறைத் திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.ரா.சிவராமன், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், மாவட்ட சுற்றுலா அலுவலர் தஞ்சாவூர் / அரியலூர் சங்கர், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.