அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் 12வது வாரிய கூட்டம் உயிரிப்பல்வகைமை திருத்த சட்டத்தில் அதிகாரிகள் நியமித்தல் தொடர்பாக ஆலோசனை
சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியத்தின் 12வது வாரிய கூட்டம், வனம்,காதித்துறை அமைச்சர் மற்றும் வாரிய தலைவர் ராஜகண்ணப்பன் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. சுற்றுசூழல், காலநிலை மற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு முன்னிலை வகித்தார். உயிரிப்பல்வகைமை என்பது நுண்ணுயிரிகள், பூச்சிகள் போன்ற மிகச்சிறிய உயிரினங்கள் முதல் மரங்கள் மற்றும் பாலுாட்டிகள் போன்ற பெரிய உயிரினங்களுக்கிடையே உள்ள பல்வகைமையைக் குறிக்கிறது.
உயிரிப்பல்வகைமை உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வளங்களை வழங்குவதோடு உள்ளூர் சமூகங்களின் வாழ்வாதார உருவாக்கத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் மானுடவியல் அழுத்தம், காலநிலை மாற்றம் மற்றும் உயிர்வளங்களை வரையறையின்றி பயன்படுத்துதல் போன்றவற்றால் உயிரிப்பல்வகைமை பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியம், உயிரிப்பல்வகைமை சட்டம் 2002பிரிவு 22ன் கீழ் தமிழ்நாடு அரசால் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை துறையின் மூலம் உருவாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை விதிகள், புதிய உயிரிப்பல்வகைமை பாரம்பரிய தலங்களை அறிவிக்கை செய்தல் மற்றும் அறிவிக்கை செய்யப்பட்ட தலங்களைப் பாதுகாத்தல், வேளாண் உயிரிப்பல்வகைமை தொடர்பான நடவடிக்கைகள், செஞ்சந்தனம் மர விற்பனை மூலம் பெறப்பட்ட அணுகுதல் மற்றும் பலன்பகிர்வு தொகைகளை பயனாளர்களுக்கு பகிர்வு செய்தல், உயிரிப் பல்வகைமை திருத்த சட்டத்தில் உள்ள அதிகாரிகளை நியமித்தல் மற்றும் தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியத்தை மேம்படுத்துதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
 
 
 
   